Friday, March 30, 2012

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஆனந்த கிருஷ்ணன். இவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். இவரது தந்தை கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானைச் சேர்ந்தவர், இவரது தாய் சுபத்ரா, மகாகவியின் மாமனார் ஊரான கடையத்தைச் சேர்ந்தவர்.
படித்து முடித்ததும், அமெரிக்காவில் வேலை கிடைத்து, அங்கேயே செட்டிலாகி விட்ட கிருஷ்ணன் - சுபத்ராவின் மகன் ஆனந்த கிருஷ்ணன், படிப்படியாக முன்னேறி, தூதரக வேலையில் சேர்ந்து விட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரூபன், ரோகன் என்று பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள்.
ஆனந்த கிருஷ்ணனின் பணியில், ஒரு பகுதி தென்னகத்தில் உள்ள மாணவ, மாணவியருக்கு, அமெரிக்க கல்வி பெறுவது எப்படி என்பதை எடுத்துச் சொல்வதாகும். இதற்காக, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரை சந்தித்து பேசுவது, ஆனந்த கிருஷ்ணனிடம் உள்ள சிறப்பம்Œம்.
இதன் ஒரு கட்டமாக, திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்துக்கு பயணம் மேற்கொண்டார். இவர் தன் நெல்லை பயணத்தை பற்றி, பெற் றோருக்கு சொல்லவும், அவர்களுக்கு மலரும் நினைவுகள் வர, நெல்லை தாமிரபரணி துவங்கி, கடையம் வரையிலான சிறப்புகளை சொன்னதுடன், தாங்களும் வருவதாகக் கூறி, அதன்படியே வந்து விட்டனர். கல்லூரி பணி முடித்து, ஆனந்த கிருஷ்ணனின் குடும்பம், தாமிரபரணி கரையோரமாக பயணம் மேற்கொண்டது.
ஆனந்த கிருஷ்ணன், அவரது மனைவி குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஒவ்வொரு இடத்தையும் ரசித்து பார்த்தார். மகாகவியின் பாதம் பட்ட கடையத்தில், என் பாதம் படுவது புண்ணியம் என்றபடி, அந்த தெருவில் காரைவிட்டு இறங்கி நடந்தே சென்றார்.
அம்பாசமுத்திரம் ஆனந்தபவன் ஓட்டல் சாப்பாடு, குற்றாலம் குளியல், கங்கை கொண்டான் ஈஸ்வரன் கோவில் தரிசனம் என்று ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த ரசனையை வெளிப்படுத்தினர்.
பயணத்தின் முடிவில்தான் ஒரு சுவாரசியம் ஏற்பட்டது. சிற்றுண்டி சாப்பிடுவதற்காக, குற்றாலம் செங்கோட்டை ரோட்டில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்ததும், அங்குள்ள ஓட்டல் ஊழியர்கள், "டிவி'யை ஓட விட்டனர். எல்லாரும், "டிவி'யின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்ப, ஆனந்த கிருஷ்ணனின் குழந்தைகள் ரூபனும், ரோகனும் அதை கொஞ்சமும் பொருட்படுத் தாமல், தோட்டத்து செடி, கொடிகளை ஆராய்ந்து கொண்டு இருந்தனர்.
எளிமையின் உருவமாக இருந்த குழந்தைகளின் தாய், கிறிஸ்டைன் பேசுகையில், "என்னோட குழந்தைகளுக்கு, "டிவி' என்றால் என்னவென்று தெரியுமே தவிர, அதில் கொஞ்சமும் விருப்பமில்லை; அதை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். காரணம், நாங்களும் அப்படி இருப்பதால் தான்.
"அதே போல, அறிமுகமில்லாத உணவை தொடக்கூட மாட்டார்கள், பொது இடங்களில், சிறுநீர் போக மாட்டார்கள், குப்பைகளை அதற்கான தொட்டி கிடைத்தால் போடுவர், அதுவரை, தங்களது பைகளிலேயே சுமந்து கொண்டு இருப்பர். இயற்கையான விஷயங்களில், மிகவும் ஆர்வம் காட்டுவர். எளிமையான உணவையே எடுத்துக் கொள்வர், நிறைய படிப்பர்; அதைவிட, நிறைய சந்தேகம் கேட்பர். மொத்தத்தில் அமைதியான, ஒழுக்கமான, அன்பான, அறிவான குழந்தைகளாகத்தான், நாங்கள் வளர்க்கிறோம்; அவர்களும் அப்படியேதான் வளர்கின்றனர், வளர்வர்...' என்று கூறி முடித்தார்.

No comments: