Friday, March 30, 2012


நாமக்கல்: பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, 2012-13ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், ஆசிரியர், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைக்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. சட்டசபை தேர்தல் வாக்குறுதி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், 2012-13ம் ஆண்டு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே, பள்ளிக் கல்வியில் புதிய அறிவிப்பாகும். இது, வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். எனினும், தமிழகத்தின் பள்ளி கல்வித்துறையின் தேவைக்கு ஏற்ப, 30 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம்போல், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: