Saturday, October 1, 2016

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

*“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀🎀*

*காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*

*பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*

*சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்*

*வாழை வாழ வைக்கும்*

*அவசர சோறு ஆபத்து*

*ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*

*இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*

*ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை*

*உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*

*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*

*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*

*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*

*💎சித்தம் தெளிய வில்வம்*

*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*

*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*

*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*

*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*

*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*

*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*

*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*

*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*

*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*

*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*

*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*

*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*

*உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.*

*🎀🎀நலம் உடன் வாழ்வோம்🎀🎀*

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?


குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?


டாக்டர் கு. கணேசன்

குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22 கோடி குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. சுயசுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் குறைவதால் இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இளைய வயதினருக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.காரணங்கள்

அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களை திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண்தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவி சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழுத் தொல்லை ஏற்படுவதற்குத் துணை போகின்றன. சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் தின்னும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்யத் தவறினாலும் குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

புழுக்கள் வளரும் விதம் குடல்புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் அவை புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’க்கள் எனும் குறும்புழுக்கள் வெளிவரும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவற்றைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் 4 நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து உணவுக்குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாக குடலுக்கு வந்து சேரும். இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழுப் புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.உருண்டைப் புழு

குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது ‘உருண்டை புழுக்கள்’ (Round worms). பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் ஒரு சரடு மாதிரி இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 20 புழுக்களிலிருந்து 100 புழுக்கள் வரை இருக்கலாம். ஓர் ஆண் புழுவின் நீளம் 10 - 20 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 30 - 40 செ.மீ. ஒரு பெண்புழு ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் முட்டைகளை இடும். ஒரு புழுவானது ஒரு வருடம் வரை நம் குடலில் வாழும். உருண்டைப் புழுக்கள் குடலில் இருந்தால் அந்த நபருக்கு அடிக்கடி வயிற்றில் வலி வரும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது. குமட்டல் வரும். உணவு செரிமானம் குறையும். உடல் மெலியும். எடை குறையும். இந்தப் புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச் சாப்பிடுவதால், இந்த நபர்களுக்குப் புரதச் சத்துக் குறைவு நோய் (Protein Malnutrition) ஏற்படும். இந்தப் புழுக்களின் உடலிலிருந்து ஒருவித நச்சுப்பொருள் சுரக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சருமத்தில் அரிப்பு, சிவந்த தடிப்புகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படும். இளைப்பு ஏற்படலாம். இந்தப் புழுக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டால் ஒரு பந்துபோல் திரண்டு குடலை அடைத்துக்கொள்ளும். அப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உருண்டைப் புழுக்கள் சாப்பிட்டுவிடுவதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் வளர்ச்சிக் குறைவும் மனவளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன. கொக்கிப் புழு அமைப்பில் உருண்டைப் புழுக்களைப்போலவே இருக்கிற ‘கொக்கிப் புழுக்கள்’ (Hook worms) அளவில் மட்டும் மிகச்சிறியவை. இவற்றின் லார்வாக்கள் மனிதப் பாதத்தின் சருமத்தைத் துளைத்துக் கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாக குடலுக்கு வந்து முழு புழுக்களாக உருமாறுவதுண்டு. ஓர் ஆண் புழு 8 மி.மீ நீளமிருக்கும். பெண் புழு 12.5 மி.மீ. நீளமிருக்கும். இவற்றின் அகலம் அதிகபட்சமாக 5 மி.மீ. இருக்கும். இவை மூன்று ஆண்டுகளுக்கு மேல் நம் குடலில் உயிர் வாழும். இவற்றின் வாய்ப்பகுதி கொக்கிபோல் வளைந்திருக்கும். அதில் நான்கு சூரப்பற்கள் இருக்கும். குடல் சுவற்றில் கொக்கி கோர்த்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இத்தோடு புழுக்கள் கடித்த குடல் பகுதியிலிருந்து ரத்தம் தொடர்ந்து கசியும். இவ்வாறாக குடலிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், கொக்கிப்புழுவால் பாதிக்கப்பட்ட நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ‘ரத்தசோகை நோய்’ (Anaemia) ஏற்படுவதுதான் முக்கியமான பாதிப்பு.

ஒரு கொக்கிப் புழுவானது நாளொன்றுக்கு 0.2 மி.லி. ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவரின் குடலில் ஒரே நேரத்தில் ஆயிரம் புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. அப்படியானால் இந்தப் புழுக்கள் தினமும் எவ்வளவு ரத்தத்தைக் குடித்து நம்மை பாதிக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு, சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கிப் புழு பாதிப்பு மிக அதிகம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரத்தசோகை நோய் ஏற்பட முக்கியக் காரணம் கொக்கிப்புழு தொல்லைதான். குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படும்போது நினைவாற்றல் குறைகிறது. கல்வித்திறன், சிந்தனைத்திறன் என ஒட்டுமொத்த செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இது ஏற்படும்போது தாயையும் சேயையும் பாதிக்கிறது. கொக்கிப்புழு லார்வாக்கள் பாதங்களைத் துளைத்து உடலுக்குள் நுழைகின்றன. அப்போது பாதங்களில் அழற்சி, அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம். ஒருவருக்குப் படை எதுவுமில்லாமல் பாதங்களில் அரிப்பு ஏற்பட்டால் கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நூல் புழு

குடல்புழுக்களில் மிகச் சிறியவை ‘நூல் புழுக்கள்’ (Thread  worms). பார்ப்பதற்கு வெட்டிப்போட்ட பருத்தி நூல்போல் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஓர் ஆண் புழுவின் நீளம் 2 லிருந்து 4 மி.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 8லிருந்து 12 மி.மீ. இவற்றின் தடிமன் 0.1 லிருந்து 0.5 மி.மீ.பொதுவாக இப்புழுக்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும். மற்ற புழுக்கள் எல்லாம் குடலில்தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்புதான் இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவால் பலருக்கும் இரவில் தூக்கம் கெடும். நூல் புழுக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியத்துக்கு அதிகமாகக் கெடுதல் தருவதில்லை.

சாட்டைப் புழு

பார்ப்பதற்கு சாட்டையைப்போல ஒரு முனை தடித்தும் மறுமுனை ஒல்லியாக நீண்டும் இருப்பதால் இப்புழுவுக்குச் ‘சாட்டைப்புழு’ (Whip worm) என்று பெயர். ஓர் ஆண் புழுவின் நீளம் 3 லிருந்து 4 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 4 லிருந்து 5 செ.மீ. குழந்தை இரவில் திடீரென்று உறக்கத்தில் எழுந்து அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால் சாட்டைப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். பசியே இருக்காது. சாப்பிடமாட்டார்கள். எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் செயலில் மந்தமாகவும் இருப்பார்கள்.

நாடா புழு

ஒரு பாவாடை நாடாவைப்போல வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கிற புழுக்களுக்கு ‘நாடா புழுக்கள்’ (Tape worms). என்று பெயர். இவற்றைத் தொட்டுப் பார்த்தால் தட்டையாக இருக்கும். இதனால்  ‘தட்டைப் புழுக்கள்’ என்றொரு பெயரும் உண்டு. இவற்றில் பல வகைகள் உள்ளன. முக்கியமானவை மாட்டிறைச்சி நாடா புழு (Beef Tape worm), பன்றி இறைச்சி நாடா புழு (Pork Tape worm). மீன் இறைச்சி நாடா புழு (Fish Tape worm), நாய் நாடா புழு (Echinococcus granulosus). ஒவ்வொரு புழுவும் ஒரு ரிப்பன் மாதிரி 5 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை நீளமாக இருக்கும். ஒருவருக்கு ஒன்றிரண்டு புழுக்கள்தான் இருக்கும். ஆனால், 15 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.சாதாரணமாக எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. மாட்டு இறைச்சி / பன்றி இறைச்சி / மீன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மற்றும் நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இந்தப் புழுக்களின் லார்வாக்கள் வசிப்பதே இதற்குக் காரணம். வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் இதனால் வரலாம். மேலும் கல்லீரல், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் ‘நீர்க் கட்டிகள்’ (Hydatid cysts) வளர்வதும் உண்டு. இது குழந்தைகளுக்கு அவ்வளவாக தொற்றுவதில்லை. பெரும்பாலும் பெரியவர்களுக்கு தொற்றுவதே நடைமுறை.

பரிசோதனை என்ன?

பெரும்பாலான குடல் புழுக்களை நோயாளிக்கு மலப்பரிசோதனை செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மலத்தில் குடல் புழுக்களின் முட்டைகள் வெளிவருவதைக் கண்டறிந்து, எந்தப் புழுவின் முட்டை, எந்தக் குடல்புழு நோய் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் குடல் புழுக்களின் லார்வாக்கள் நுரையீரலுக்குள் பயணம் செய்யும்போது ரத்தத்தில் `இயோசினோபில்’ அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை வைத்து மறைமுகமாக குடல்புழு தொல்லையைக் கணிப்பதும் உண்டு. நாடா புழுக்களைக் கண்டறிய, பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட தசைகளின் திசுக்கள் ஆய்வு செய்யப்படும். அதன் மூலம் நாடாபுழு பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். நாடா புழுக்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு மலத்தில் வெள்ளை நிறத்தில் வெட்டிப்போட்ட ரிப்பன் மாதிரி இவற்றின் உடற்பகுதிகள் வெளியேறும். இவற்றைப் பரிசோதித்தும் இந்தப் புழுக்களை உறுதி செய்யலாம்.

சிகிச்சை என்ன?

குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள் கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். இந்த மருந்துகளில் நாடா புழுக்கள் தவிர மற்ற புழுக்களுக்கு ‘அல்பென்டசோல’ மாத்திரை அல்லது மருந்து முக்கியமாகத் தரப்படுவதுண்டு. நாடா புழுக்களுக்கு ‘நிக்லோசமைடு’ மாத்திரைகள் தரப்படுவதுண்டு. அதே வேளையில் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல் புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்க என்ன வழி?

* சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட வேண்டும்.
* குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
* திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக்கூடாது.
* கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்,
* சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.
* நகங்களை பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.
* குழந்தைகள் விரல் சூப்பக்கூடாது.
* குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம்.
* எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
* ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளை குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதற்கு ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
* சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாது.
* காய்கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு  தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
* நன்றாகக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
* பாதுகாக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.
* காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்
* அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பித்தவெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
* தரமான கடைகளில் மட்டுமே இறைச்சிகளை வாங்க வேண்டும்.
* மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்தபின் சாப்பிட வேண்டும்.
* வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.  

சமையலுக்கு முன்பு காய்கறிகளை கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும் குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்
⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்
⭕பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
⭕ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
⭕ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
⭕ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
⭕ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்
⭕ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
⭕ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
⭕ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்
⭕ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
⭕ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.
⭕ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்
⭕ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்
⭕ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
⭕ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்
🍚🍲 *அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

Thursday, September 22, 2016

அர்த்த சாஸ்திரம் சொல்லும் முக்கிய 29 விடயங்கள்!

1 .ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
2 .ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
3 .ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
4 .ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
6 .உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
7 .கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
8 .காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
9 .பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
10. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
11 .சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
12. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
13. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
14 .கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
15 .அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
16 .யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
17. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
18. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
19. சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.
20. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
21. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
22 எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
23 மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
24 பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
25 கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
26 வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
27 பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
28 வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.
29. கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.
தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

விதுர நீதி

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்

Tuesday, September 20, 2016

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

ஒவ்வொரு தமிழ் மாத அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பைரவரை வழிபாட்டால் எல்லா நலமும் பெற்று வாழலாம். பைரவர் மிக சக்தி வாய்ந்தவர்.அவரை முழு நம்பிக்கையுடன் வணங்கினால் அனைத்து வளங்களையும் வாரி வழங்குவார்.

அஷ்டமி விபரம் :

சித்திரை: - சநாதனாஷ்டமி

வைகாசி: - சதசிவாஷ்டமி

ஆணி: - பகவதாஷ்டமி

ஆடி: - நீலகண்டாஷ்டமி

ஆவணி: - ஸ்தாணு அஷ்டமி

புரட்டாசி: - சம்புகாஷ்டமி

ஐப்பசி: - ஈஸ்வராஷ்டமி

கார்த்திகை: - ருத்ராஷ்டமி

மார்கழி: - சங்கராஷ்டமி

தை: - தேவதேவாஷ்டமி

மாசி: - மகேஸ்வராஷ்டமி

பங்குனி: - த்ரயம்பகாஷ்டமி

பைரவரை வணங்கினால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார்  சிவன்.  கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன்.“சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என்றார் பிரம்மன்.

பைரவர் உருவானார்

விதி யாரை விட்டது.? பிரம்மனின் பேச்சும் செயலும் ஈசனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தன் உடலில் இருந்து ஒரு சக்தியை வெளிப்படுத்தினார். அந்த சக்திக்கு “பைரவர்” என்று பெயர் வைத்தார். உடல் முழுவதும் திருநீறு பூசி, சர்பங்களை தன் உடலில் சூட்டி கொண்டும், பாதத்தில் சலங்கையை கட்டி கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அலங்கரித்து அணிந்து, சூலம், பாசம் வைத்து கொண்டு சிவந்த விகாரமான சடைகளை கொண்டவராக கோபம் நிறைந்தவராக இருந்தார் பைரவர்.“அய்யனே… ஆணையிடுங்கள். சிவபெருமானை மதிக்காதவன் கதி என்னவாகும் என்பதை, பிரம்மனின் நிலையே ஒரு உதாரணமாக உலகுக்கு காட்டுகிறேன்.” என்றார் பைரவர்.“ஐந்து தலை இருக்கிறது என்கிற ஆணவத்தில்தானே பிரம்மன் எம்மை அலட்சியம் செய்கிறான். போனால் போகட்டும் என்று விட்டால், பிரம்மனின் போக்கு பிரம்மனுக்கே அழிவை தந்திடும் போல இருக்கிறது. அதனால் பிரம்மனுக்கு ஆணவ புத்தியை தந்த, அவன் ஐந்தாவது தலையை மட்டும் எடுத்து விடு பைரவா” என்றார் பரமேஸ்வரர்.“தங்கள் ஆணைபடி செய்வேன்.” என்று கூறிய பைரவர், பிரம்மனின் ஐந்து தலையில் இருந்து ஒரு தலையை தன் நுனி நகத்தால் மலரை பறிப்பது போல் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் பிரம்மனின் தலையில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது. பல மணிநேரம் ஆகியும் பிரம்மனின் உடலில் இருந்து வெளிவரும் இரத்தம் நிற்கவில்லை.“என் ஆணவன் அழிந்தது. மன்னித்துவிடுங்கள்” என்று வலியால் துடித்து இறந்தார் பிரம்மன். சிவபெருமானின் விருப்பபடி பிரம்மனை மன்னித்து உயிர் தந்தார் பைரவர்.“பைரவரே… நான் செய்த தவறுக்கு தண்டனையாக நீங்கள் என் தலையை கீரை கிள்ளுவது போல் கிள்ளி எறிந்தீர்கள். அந்த தலையை நீங்களே என்றும் உங்கள் கையில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் கையில் இருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு ஆணவத்தால் பிரம்மன் ஐந்து தலையில் ஒரு தலையை இழந்தான் என்று தெரிந்து கொண்டு, அவர்களும் என்னை போல் திருந்த வேண்டும்.” என்று பிரம்மன், பைரவரிடம் வேண்டிக் கொண்டதால், பிரம்மனின் மண்டை ஓட்டை பிக்ஷ பாத்திரமாக வைத்து கொண்டார். இந்த சம்பவத்தை கேள்விபட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுப்படுபவராக திகழ்கிறார் பைரவர்.

விஷ்ணுபகவானுக்கு வந்த வினை

முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர்” பைரவரை வைகுண்டத்தில் அனுமதிக்காமல் தடுத்தார். இதனால் கோபம் கொண்ட பைரவர், விஷ்வக்ஸேனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவரை உயிர் இழக்கச் செய்து, வைகுண்டத்தில் கோபமாக நுழைந்தார்.விஷ்ணுபகவான் சயனித்திருந்தாலும் பைரவர் கோபமாக வருவதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து வரவேற்று மரியாதை செய்தார்.“நான் வந்திருப்பதை ஞானத்தால் அறிந்தும் அதை பற்றி பெரியதாக நினைக்காமல் சயனித்து கொண்டிருந்தாயா? உன் காவலன் என்னை அலட்சியம் செய்ததை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்த உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று கூறிகொண்டே விஷ்ணுபகவானை நெருங்கினார் பைரவர்.“பைரவா… உனக்கு ஏன் அவ்வளவு சிரமம். நானே என் தலையை அடித்து கொள்கிறேன்“ என்று கூறி தன் தலையை பலமாக அடித்து கொண்டார் பகவான். இதனால் அவருடைய தலை  இரண்டாக பிளந்தது. ரத்தம் நிற்காமல் வெளியேறியது. அதனால் விஷ்ணுபகவானின் உடலில் இருந்த சக்திகள் குறைந்து மயங்கி விழுந்தார்.ஸ்ரீமந் நாராயணனின் தலையில் இருந்து வடியும் ரத்தத்தை தன் கையில் இருந்த பிரம்மனின் மண்டை ஓட்டில் பிடித்தார் பைரவர்.தம் கணவரின் நிலை கண்டு கலங்கினார்கள் ஸ்ரீதேவியும் பூதேவியும். அதனால் பைரவரிடம், “தயவு செய்து அவரை காப்பாற்றி தாருங்கள்” என்று வருத்ததுடன் கேட்டு கொண்டார்கள்.பெண்களின் கண்ணீரை கண்ட பைரவர், மனம் இறங்கினார். விஷ்ணுபகவானை மயக்கத்தில் இருந்து விடுவித்தார். வைகுண்டத்தின் காவலரான விஷ்வக்ஸேனருக்கும் உயிர் தந்தார் பைரவர்.பைரவருக்கு சிவன் தந்த அந்தஸ்து“எம்மை வணங்கும் பக்தர்களுக்கு நீயும் துணை இருந்து அவர்களை வழிநடத்து. அத்துடன் யார் உன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு எந்த தீங்கும் நெருங்காமல் காப்பாற்று.” என்று இறைவன் சிவபெருமான் பைரவருக்கு அருளாசி வழங்கினார்.ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.

மிளகு தீப பரிகாரம்

பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். பிறகென்ன… வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான்.

Sunday, September 18, 2016

பதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்!

பதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்!குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள். இதற்குப் பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை நாடியில் கூறியுள்ளனர். அந்த வகையில், அகத்தியர், ‘‘சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா & பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதிச் சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே’’ என்கிறார்.

பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.

‘‘அஞ்சருவிச் சலத்தருகு யடுத்தே வரகலூராம் & காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டைச் செங்கனூராம் முழு மண்டலமே. தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே’’ என்கிறார்.

இப்பாடலின் பொருள்: குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர். சோழ புரத்தில் பைரவச்சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர். திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி. திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர். அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

‘‘கடக மஸ்தமன பொழுததனிலே சுங்கனிருக்க பைரவனை & விக்ரமனை & சட்டமுனியை கை தொழுதக்கால் ஏவலுஞ்சுன்யமும் விலக காணீரே & பெருஞ்செல்வஞ் சேரப்பாரீரே & தீராப் பிணி மடிய நிற்பீரே & மடிந்தார் தமக்காற்று திதிபிண்ட தோஷமுமொருசேர நீங்கி நீடு வாழ்வீரே யல்லால் நீத்தார் தாமுந் நல்லாசி யீவாரே’’ என்கிறார்.

பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.

‘‘போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும். ஆபரணமொடு பேரானந்தமுஞ் சேருமப் பானு வஸ்தமனப்போது பாயஸன்னம் நாட் பண்டத்து படைப்போர்க்கே’’

Thursday, September 15, 2016

செட்டிநாடு மட்டன் வறுவல்

அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் இந்த மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். மேலும் அசைவ உணவுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பிரபலமானது. இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் எப்படி மட்டனை வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன் கலவைக்கு...
மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செட்டிநாடு மசாலாவிற்கு...
பேபி வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இன்ச் துண்டு
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - 10
மிளகு - 8
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்கு கழுவி, அதோடு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைந்து, தனியாக ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, நன்கு கலந்து, தீயை குறைவில் வைத்து 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் அதில் 1 1/2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
அதே சமயம் மறுபக்கத்தில் இருக்கும் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, கிராம்பு, பட்டை, கசகசா, சோம்பு, பிரியாணி இலை மற்றும் மிளகு போன்றவற்றை சேர்த்து, வறுக்க வேண்டும்.
பின் அதனை நன்கு குளிர வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 2-3 நிமிடம் கிளற வேண்டும்.
இப்போது அதில் துருவிய தேங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, குக்கரில் உள்ள மட்டனை கலவையை அப்படியே இந்த வாணலியில் ஊற்றி, நன்கு தண்ணீர் சுண்டும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான செட்டிநாடு மட்டன் வறுவல் ரெடி!!! இதனை சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றோடு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு

எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

மசாலா பொருட்கள் :

பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்

செட்டிநாடு மசாலா பொடிக்கு :

வரமிளகாய் - 6
மல்லி - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 5 செ.மீ
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
அன்னாசிப்பூ - 1

தேங்காய் மசாலாவிற்கு :

தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 'செட்டிநாடு மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7 விசில் விட்டு, குறைவான தீயில் 20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, இறக்கவும்.

* பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி.