Wednesday, September 18, 2019

நாளையிலிருந்து (14/09/19) மஹாளய பக்ஷம் ஆரம்பம். கண்டிப்பாக தாய், தந்தை திதிகளில் தெவசமோ, தர்ப்பணமோ செய்யுங்கள். 15 நாட்களுமே தர்ப்பணம், பிரம்ம யக்ஞம் செய்வது மிகவும் சிறப்பு, உத்தமம். அப்படி செய்தால் நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் நம் குழந்தைகளுக்கு, பேரன் பேத்திகளுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும்.
மாயவரத்திற்கு அருகில், பூந்தோட்டம் என்கிற கிராமத்திற்கு செல்லும் வழியில், திலதர்ப்பணபுரி என்கிற ஸ்தலம் இருக்கிறது. இங்கேயுள்ள கோவிலில் மஹாளய பக்ஷம் 15 நாட்களையுமே “தர்ப்பணத் திருவிழா” என்று கொண்டாடுகிறார்கள். அங்கே சென்று தர்ப்பணம் செய்ய முடிந்தால் அது சிறப்பு. முயற்சி செய்யுங்கள். இந்தத் தலத்தில்தான் ஸ்ரீராமர், தன் தந்தை தசரதனுக்குத் தர்ப்பணம் செய்ததாக ஐதீகம். ராமபிரான் தர்ப்பணம் செய்வது போன்ற சிலைகள் அங்கே இருக்கின்றன.
இந்தக் கோவிலின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஆதிவிநாயகர் சன்னதி இங்கு உள்ளது. அதாவது யானை முகத்தை அடைவதற்கு முன் விநாயகர் எப்படி இருந்தாரோ அந்த மாதிரி விக்கிரகம் இருக்கிறது. கூகுளில் இந்தக் கோவிலைப் பற்றிய மற்ற விவரங்கள் இருக்கின்றன.
01. இந்த 15 நாட்களுமே நம் முன்னோர்கள் நம்மோடு வ்ந்து வசிக்க எமதர்மர் அனுமதி கொடுக்கிறார். எனவே இந்த நாட்களில் அவர்களுக்கே முன்னுரிமை. தர்ப்பணம் செய்த பிறகுதான் ஸ்வாமிக்கு விளக்கேற்றுவது, பூஜை, நைவேத்தியம் எல்லாமே.
02. சரி. நான் ரிடையர்ட். அதனால் தர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுவேன். ஆனால் என் மகன்/மகள் வேலைக்கு செல்ல வேண்டுமே, குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல வேண்டுமே. தினசரி வீட்டில் சாப்பிடாமலேயே அவர்கள் வெளியில் போக முடியுமா? இந்த கேள்வி பலருக்கு இருக்கும். இதைக் காரணமாக வைத்து சிலர் தர்ப்பணத்தையே தவிர்த்து விடுவார்கள். தவறு. குளித்து விட்டு முதலில் சமையல் ஆகட்டும். வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் சாப்பிட்டு விட்டு செல்லட்டும். அதன் பிறகு சாதமும் பருப்பும் தனியாக மீண்டும் வைத்துக் கொண்டால், கர்த்தாவும், மனைவியும் தர்ப்பணத்திற்குப் பிறகு அதை எடுத்துக் கொள்ளலாமே!
03. திதி இருந்தால் மட்டுமே அந்த நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதில்லை. 15நாட்களில் என்றைக்கு வேண்டுமானலும் செய்யலாம்.
04. வருடத்திற்கு ஒரு முறை வருகிறது. வாத்யார்கள் அதிகமாகத்தான் கேட்பார்கள். முகம் சுணுங்காமல் கொடுங்கள். கோபத்துடனும், எரிச்சலுடனும், வேண்டா வெறுப்பாக செய்வதில் எந்தப் பலனும் இல்லை.
05. ஹிந்துக்கள் அனைவருமே (பிராமணரல்லாதவர்கள் கூட) தர்ப்பணம் செய்ய வேண்டும். மாமிச உணவை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, பட்டை, சோம்பு போன்ற லாகிரி வஸ்துக்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
06. இந்த 15 நாட்களுமே கண்டிப்பாகக் குளித்து விட்டுத்தான் சமையல் செய்ய வேண்டும்.
எனக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். சாஸ்திர விரோதமான தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளலாம்.







No comments: