Wednesday, July 25, 2012

ஆன்மிக சிந்தனைகள் »சின்மயானந்தர்


உயர்ந்த குறிக்கோள் வேண்டும்
டிசம்பர் 13,2007,
18:05  IST
வாழ்க்கையில் நமக்கு முன்வினைப் பயனாகக் கிடைப்பது பிராப்தம், அதையே விதி என்கிறோம். நாம் மேற்கொள்ளும் நல்ல வாழ்க்கையும், செய்யும் நல்வினைகளும், மரத்துண்டுக்கு விசைப்படகு உதவுவதைப் போல நமக்கு உதவுகின்றன. நன்மை தரக்கூடிய வழியில் அழைத்துச் செல்கின்றன. இதை 'புருஷார்த்தம்' என்கிறோம்.
வாழ்க்கையில் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை மாற்ற முடியாது. அதுவே பிராப்தம். வாழ்க்கையை நாம் எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது. அதுவே புருஷார்த்தம்.
எந்த விஷயத்தையும் நாம் மனப்பூர்வமாக புரிந்து கொள்வதற்கு, பார்ப்பதும், கேட்பதும் மிகவும் முக்கியமானது. தானே படித்து அறிவு பெறுபவர்கள் மிகச் சொற்பமே. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் பாடங்களை உரையாற்றுகிறார்கள். எழுதிக் காட்டி, படம் போட்டு பார்க்கச் சொல்கிறார்கள்.
நமது மனம் உயர்ந்த ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதில் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குறிக்கோள் இறைவனிடம் பக்தி செலுத்துவது, அதற்குரிய பூஜை, தியானம், பஜனை இவற்றில் ஈடுபடுவது.
உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது, உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வுபெற நாம் கடைபிடிக்க வேண்டிய தத்துவம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். அதன் முடிவில் ஏற்படுவதுதான் மரணம், ஆனால், மரணத்துடன் எதுவும் முடிவதில்லை. இதைத் தெரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நமக்கு எந்தப் பயமும் இல்லை.
வாழ்க்கையை ஒரு விளையாட்டாகவே கருதுங்கள். ஒவ்வொன்றுடனும் விளையாடுங்கள். எல்லாமே தற்காலிகமானதுதான் என்று தெரிந்து கொண்டு, அந்த உணர்ச்சியுடனேயே அனுபவித்து விளையாடுங்கள்.

No comments: