டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடும் வறட்சி நிலையை நோக்கிப் போய்க் கொண்டுள்ளன.
இந்த மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை சரிவர பெய்யவில்லை. கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட 1 சதவீதம் அதிகமாக மழை பெய்தாலும், இந்த 7 மாநிலங்களில் 60 முதல் 70 சதவீதம் அளவுக்கு மழை குறைவாகவே பெய்துள்ளது.
குஜராத்தில் 71 சதவீதமும் ராஜஸ்தானில் 82 சதவீதம் அளவுக்கும் மழை அளவு குறைந்துள்ளது.
நாட்டின் மொத்தமுள்ள 1097 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் 175 லட்சம் ஹெக்டேர் நிலும் இந்த மாநிலங்களில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த மாநிலங்களள் பயிரிடும் பரப்பளவைக் குறைத்துக் கொண்டு, குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சலைத் தரும் பயிர்களை மட்டுமே பயிரிடுமாறு மத்திய விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் தரும் சுமார் 60 லட்சம் குவிண்டால் அரிசி, பருப்பு, சோயா, சூரியகாந்தி விதை ரகங்களை இந்த மாநிலங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும் மழை குறைந்ததால் நாட்டில் உள்ள அணைக்கட்டுக்களில் 18 சதவீதம் அளவுக்கே நீர் இருப்பு உள்ளது. இதனால் பல பகுதிகளில் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.
'எல் நினோ' காரணம்:
இந் நிலையில் மழை குறைந்து போனதற்கு 'எல் நினோ' பருவ நிலை மாற்றமே காரணம் என்று
இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
'எல் நினோ' காரணமாக இந்த மாதத்திலும், பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
இன்னும் வறட்சி நிலை ஏற்படவில்லை-சரத் பவார்:
இந் நிலையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில், இந்தாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. ஆனாலும், இன்னும் நாட்டில் வறட்சியான சூழல் ஏற்படவில்லை.
போதிய அளவு மழை பெய்யாததால், உணவு உற்பத்தி குறையும் என, கூறப்படுகிறது. விவசாயிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆலோசித்து வருகிறோம்.
அதேபோல், நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த முடிவை எடுப்பதற்காக, வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை காத்திருப்போம். அதற்கு பின், இதுபற்றி முடிவு எடுக்கலாம்.
பருவமழை சரியாகப் பெய்யாததால், உணவு உற்பத்தி செய்வதில், விவசாயிகளுக்கு சவாலான சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதும், சவாலான பிரச்னை.
அதே நேரத்தில் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில், 2011-12ல், சாதனை அளவாக, 252 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளோம் என்றார்.
கவலையில் அரசியல்வாதிகள்:
இந் நிலையில் வறட்சியை எதிர்கொண்டுள்ள தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளும் கட்சிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. குஜராத் மாநிலம் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலையும், எல்லா மாநிலங்களும் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்கவுள்ளன.
வறட்சி ஏற்படும்போதெல்லாம் அடுத்து நடந்த எந்தத் தேர்தல்களிலும் ஆளும் கட்சிகள் படுதோல்வியை சந்திப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment