Tuesday, June 19, 2012


விவசாயிகள் தேவைதானா?

First Published : 15 Jun 2012 02:53:52 AM IST

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பல சாதனைகளில் விவசாயத்துக்கு விவசாயிகள் வேண்டாம் என்ற கொள்கையும் ஒன்று. நிலத்தைவிட்டு விவசாயிகள் வெளியேறும் போக்கு துரித கதியில் நிகழ்ந்து வருகிறது.
 இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த ஒருவர் விவசாயத் துறைக்கு அமைச்சராக உள்ளார். அவருக்கு விவசாயம் பகுதி நேர வேலை. ஐ.பி.எல்., கிரிக்கெட் இவற்றையெல்லாம் கவனித்ததுபோக நேரமிருந்தால் அறிக்கை விடுவார். வர்த்தகத்துறை அமைச்சருடன் மோதுவதுண்டு.
 இந்தியாவில் விதர்பா பகுதி விவசாயிகள்தாம் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு தகவல் உண்டு. நமது மைய விவசாய அமைச்சரும் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயிகள் வேண்டாம் என்ற கருத்தில் பிரதமருடன் ஒத்துப் போவது இயல்புதான்.
 ""பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர்'' என்று எழுதிய வள்ளுவர், ""அன்னத்தை வழங்கி மற்றவர்களின் பசியை ஆற்றும் தருமம் மற்ற எல்லா தருமங்களைவிட உயர்ந்தது'' என்று குறளோவியம் படைத்துள்ளார்.
 பாகவதத்தில் பகவான் கிருஷ்ணன் நாரதரிடம், விவசாயியை ""அன்னதாதா'' என்று போற்றி உலகுக்கு உணவு வழங்கி மக்களின் பசியாற்றும் விவசாயியை நான் வணங்கி வழிபடுகிறேன்...'' என்று கூறியுள்ளார்.
 அப்படிப் போற்றத்தக்க விவசாயிகள் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்ட விவரத்தை அண்மையில் ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டியதை பகவான் கிருஷ்ணரும் பார்க்கவில்லை. திருவள்ளுவரும் பார்க்கவில்லை. நாம் பார்த்து நொந்து பயன் என்ன?
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூன்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வேளையில் எதை நாம் பாராட்டுவது என்று புரியவில்லை. விவசாயிகளை விரட்டும் பணியைப் பாராட்டுவதா?
 பழங்குடி மக்களின் உரிமைகளை நசுக்கி அவர்களை நக்சலைட்டுகளாக மாற்றிய பணியைப் பாராட்டுவதா? நாளுக்கு நாள் நாணயமிழந்து வீழ்ந்துவிட்ட ரூபாய் மதிப்புக்காகப் பாராட்டுவதா? சில்லறை விலைக்கு குறியீட்டெண் மளமளவென்று ஏறி 10.4 சதவிகிதம் தொட்டுள்ளதைப் பாராட்டுவதா?
 ஊழலை ஒழிக்கத் தயார் செய்த கொள்ளை அறிக்கைபோல் ஒரு வெள்ளை அறிக்கை வெற்றுக் காகிதத்திற்காகப் பாராட்டுவதா?
 இன்றுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு வழிகாணும் கருவியாக உள்ள கரும்பு எத்தனால் உற்பத்திக்கு முயலாமல் சாராய ஆறுகளை ஓடச் செய்யும் சாதனையைப் பாராட்டுவதா? எதுவுமே புரியவில்லை.
 விவசாயிகளை விரட்டுவதில் அல்லது வெளியேற்றுவதில் ஆர்வமாயுள்ள இந்திய ஆளும் வர்க்கம் இன்றைய ஐரோப்பாவைக் கவனிப்பது நல்லது. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் விவசாய நிலப்பரப்பு அதிகம்.
 அதன்பின்னர் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி தவிர நெதர்லாந்தில் மட்டுமே குறைவான விளைநிலம் உள்ளது.
 ஐரோப்பிய விவசாயிகள் சூழலுக்கேற்றபடி வளம்குன்றா வேளாண்மையைக் கடைப்பிடிக்கவும், விளைபொருள்களுக்கு லாபகரமான விலைகளைப் பெறவும் மானியங்களை வழங்கி ஏற்றுமதி செய்வோரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
 ஏற்றுமதிப் பொருள்களுக்குச் சிறப்பு மானியமும் உண்டு. டென்மார்க், நெதர்லாந்து நாடுகளில் பால்வளமும் கால்நடை வளர்ப்பும் அதிகம். பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி ஏற்றுமதி உண்டு.
 ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், அயர்லாந்து, டென்மார்க், கிரீஸ், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை வேளாண் ஏற்றுமதி மூலம் கணிசமாக லாபம் பெற்று வருகின்றன.
 ஒட்டுமொத்த ஐரோப்பாவில் 1.4 கோடி விவசாயப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 1 கோடிப் பண்ணைகள் சிறியவை. அதாவது 1 ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவானது.
 மொத்த வேளாண்மை உற்பத்தியில் சிறிய பண்ணைகளின் பங்கு 10 சதவிகிதம்.
 கடந்த பத்து ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளுக்கு அளித்து வரும் சலுகைகள் அளவிடற்கரியது.
 ஐரோப்பிய யூனியன் அல்லது யூரோ நாடுகள் இப்போது ஒரு புதிய விவசாய ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளன. இதன் பெயர் ஐரோப்பிய விவசாயப் பொது உடன்பாட்டுக் கொள்கை. கி.பி. 2014 இல் தொடங்க உள்ளது.
 சென்ற ஆண்டு ஐரோப்பியப் பொது உடன்பாட்டின் செலவினம் 60 பில்லியன் யூரோ. இது யூரோ நாடுகளின் மொத்தச் செலவினங்களில் அதாவது யூரோ பட்ஜெட் செலவுகளில் 50 சதவிகிதமாகும்.
 இந்தப் பொது உடன்பாட்டின்படி 2014 - 20 களில் 400 பில்லியன் யூரோவாக சுமார் 7 மடங்கு விவசாயச் செலவினங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.
 இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விவசாயச் செலவினங்களைக் குறைக்கும் போக்கு தென்படுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விவசாயிகளின் உற்பத்திச் செலவு முழுவதுமே மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் செய்யும் உற்பத்தியை நல்ல விலைக்கு விற்று லாபமும் பெற்று மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் வழியில் விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
 அண்மையில் டோஹாவில் ஒன்றுகூடிய உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் வளர்ச்சியுற்ற நாடுகளில் விவசாய மானியத்தைக் குறைக்கும்படி வற்புறுத்தப்பட்டபோது, அமெரிக்க - ஐரோப்பியப் பிரதிநிதிகள் ""நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறைவுதான்.
 இன்னமும் கூடுதலாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே உலக வர்த்தக அமைப்பின் கோரிக்கையை ஏற்பதற்கில்லை'' என்று கூறி அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
 அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் விவசாயம் தேவை. ""எங்களுக்கு விவசாயம் வேண்டும்'' என்று கோஷம் போடும்போது, இந்தியா மட்டும் ""எங்களுக்கு விவசாயிகள் தேவையில்லை'' என்று சொல்லாமல் சொல்லி விவசாயிகளின் தற்கொலைகளை ஊக்குவிப்பது ஏன்?
 தேச வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கே தேவையில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமா?

No comments: