நாம் குடிக்கும் டீயிலிருப்பது… மரத்தூளா, மஞ்சனத்தியா, குதிரை சாணமா?!
Friday, April 27, 2012 at 3:56 pm | 701 views
தேசிய பானமாகப் போகும் தேநீரின் இன்றைய நிலையை தெரிஞ்சிக்கங்க!
தேசியப் பானம் என்ற அளவுக்குத் தேநீர் கருதப் பட்டாலும், இன்று பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துவது கலப்படத் தேயிலையைத்தான் என்கின்றன பல்வேறு சர்வேக்கள்.
ஏழைகளின் உற்சாக பானம், இப்படி பாஷாணமாக மாற்றப்படுவது எப்படி? இதோ சில பகீர் உண்மைகள்:
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் ‘திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை – குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங் கொட்டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.
ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!
எது ஒரிஜினல்?
தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலான வட மாநில புரோக்கர்கள்தான் கலப்படத்துக்குக் காரணம் என்கிறார்கள், தேயிலைத் தோட்ட அதிபர்கள்.
”ஒரிஜினல் தேயிலைத் தூளை நேரடியாக நாங்கள் விற்பனை செய்ய முடியாது. சிண்டிகேட் போட்டுக்கொண்டு கிலோ 30 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரைக்கும் எங்களிடம் வாங்கி, மார்க்கெட்டில் 250 ரூபாய்க்கும் மேல் புரோக்கர்கள் விற்கிறார்கள். டீக்கடை வியாபாரிகளுக்கு ஒரிஜினல் டீத்தூள் விலை கட்டுப்படி ஆகாததால்தான், கலப்படத்தை நாடுகிறார்கள். அரசு நடவடிக்கை எடுத்து தேயிலைத் தூளுக்கு நியாயமான விலையை நிர்ணயித்தால், கலப்படத்தைத் தடுக்கலாம்” என்கிறார்கள்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேசியப் பானம் ஆன பிறகாவது, தேயிலைக் கலப்படத்தைத் தடுக்குமா அரசு
No comments:
Post a Comment