Tuesday, May 1, 2012


கை கொடுத்த காற்றாலை மின்சாரம் மின்வெட்டு நேரம் குறைப்பு



காற்றாலை மின்சார உற்பத்தியில், 2,300 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால், மாநிலத்தின் பல பகுதிகளில், மின்வெட்டு நேரம் நேற்று தளர்த்தப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், மின்வெட்டு நேரம் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தனியார் அமைத்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம், மின்சாரம் கிடைத்து வருகிறது. தமிழக மின் தேவையை தீர்ப்பதில், காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.இவ்வாண்டு அதிகம்: காற்று பலமாக வீசும் காலமான, மே மாதம் முதல் நவம்பர் வரை, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். கடந்த ஆண்டு அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 3,100 மெகாவாட் மின்சாரம் வரை, காற்றாலைகளில் இருந்து கிடைத்துள்ளது.

தற்போது காற்றாலை மின் உற்பத்தி நிறுவுதிறன் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு அதிகபட்சமாக, 3,500 மெகாவாட் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில், நேற்று காற்று பலமாக வீசியதால், உற்பத்தி அதிகரித்தது. இதன்மூலம் நேற்று, 2,300 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், மின்வெட்டு நேரம் கணிசமாகக் குறைக்கப் பட்டது.

மத்திய அரசு சதி: இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மே மாதம் முதல், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதாலும், கூடங்குளம் மின் உற்பத்தி கிடைக்கும் போதும், மின்வெட்டு நேரம் கணிசமாகக் குறையும்.காற்றாலை மின் உற்பத்தி நேற்று அதிகரித்த நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில், 300 மெகாவாட் வரை குறைவாகவே கிடைத்தது. இந்த மின்சாரமும் முழுமையாகக் கிடைத்திருந்தால், மின்வெட்டு நேரத்தை மேலும் குறைத்திருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments: