Thursday, May 17, 2012


மாணவர்கள் இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் உயர்கல்விக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெறும் மாணவர்கள் படிப்பு காலத்தில் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்ற பின்பு பலதவணைகளில் அசலை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆனால் பலர் வேலைக்கு சென்ற பின்பும் அசலை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் வங்கிகளில் வராக்கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை வசூலிக்க அதிகாரிகள் செல்லும்போது முகவரிகள் மாறிவிடுகிறது.
இதை தவிர்க்க வங்கிகள் புதிய நடைமுறையை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமுலுக்கு வருகிறது.
மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-
கல்வி கடனுக்கு பான் கார்டு அவசியம். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர் இதை கடைபிடிக்கவில்லை. அவர்களுக்கு வருமான வரித்துறையின் பான் கார்டு பற்றிய விழிப்புணர்வு இல்லை. பான் கார்டு இருந்தால்தான் அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியும்.
மேலும் கடன் வசூலையும் பாக்கி தொகையையும் எளிதில் எங்களால் கண்காணிக்க முடியும். கல்வி கடன் வசூலை இந்திய கடன் தகவல் தொடர்பு மையம் ஆவணங்களில் பராமரித்து வருகிறது. பான் கார்டு இருந்தால்தான் கடன் செலுத்தாதவர்களை உடனே கண்டுபிடிக்க முடியும்.
மேலும் பான் கார்டு மூலம் வட்டி மானியம் மற்றும் இதர சலுகைகள் பெற தகுதியான மாணவர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியும். தற்போது ஆண்டு வருமானம் 4 1/2 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி கடனில் மானியம் வழங்கப்படுகிறது. பான் கார்டு வழங்கினால்தான் அவர்களது வருட வருமானத்தை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: