Saturday, April 14, 2012


     விவசாயிகள் கொண்டாடிய "பொன் ஏர்' ஒற்றுமை திருவிழா                                                                                                                                                                                                       தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விவசாயிகள் வயலில் ஒன்றாக உழுது, "பொன் ஏர்' என்ற ஒற்றுமைத்திருவிழாவை நேற்று கொண்டாடினர்.

விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என்று உணர்ந்த முன்னோர்கள், அதனை போற்றும்வகையில் உருவாக்கிய பல்வேறு விழாக்களில் ஒன்று "பொன் ஏர்' திருவிழா. ஆண்டுதோறும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை 1ம்தேதியன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது. "நந்தன' தமிழ் வருடப்பிறப்பான நேற்று, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த சிந்தலக்கரை கிராமத்தில், விவசாயிகள் இத்திருவிழாவுக்காக ஒன்று கூடினர். டிராக்டர் உள்ளிட்டவற்றிக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையணிவித்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதன்பின், ஏர் உழுவதற்காக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்திற்கு டிராக்டர்களை கொண்டு சென்று, பூஜைகளை நடத்தினர். பின்னர், அனைத்து டிராக்டர்களும் நிலத்தில் ஏர் உழ, விவசாயிகள் தானிய விதைகளை, நிலத்தில் தூவினர். இவ்வாறு செய்வதால், இந்தாண்டு விவசாயம் செழிக்கும் என அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

No comments: