Sunday, April 8, 2012


சட்டத்தின் ஆட்சி சாதிக்கும்: கெட்டவர்கள் கொட்டம் அடங்கும்: நந்தன ஆண்டு பலன்கள்
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2012,23:29 IST
மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 08,2012,00:09 IST
"வெள்ளிக்கிழமை தேய்பிறை எட்டாம் நாள் பிறக்கும் நந்தன ஆண்டால், நாட்டில், சட்டத்தின் ஆட்சி நிலைபெறும். கெட்டவர்கள் கொட்டம் அடங்கிடும்' என, ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

நவகோள்களில் முதன்மைக் கோளாக விளங்கும் சூரியன், ராசி சக்கரத்தில், முதல் ராசியாக விளங்கும், மேஷத்தில் சஞ்சரிக்கத் துவங்கும், சித்திரை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்திலேயே தென் மாநிலங்களிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

புத்தாண்டு: மேலைநாட்டினர் பலரும் முதலில், ஏப்ரல் மாதத்திலேயே புத்தாண்டைக் கொண்டாடத் துவங்கி, அதன் பின், கடந்த சில நூற்றாண்டுகளாகவே, ஜனவரியில் புத்தாண்டைக் கொண்டாடத் துவங்கினர் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி உலகில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தாண்டு, தமிழர்களுக்கு நந்தன ஆண்டாக வரும் ஏப்ரல் 13ம்தேதி, வெள்ளிக்கிழமை, தேய்பிறை எட்டாம் நாள், தனுசு ராசியில், உத்திராட நட்சத்திரத்தில், கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டு நாட்டுக்கும், மக்களுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்த ஜோதிடர்களின் கணிப்பு:

சந்தனலிங்கம் ரமேஷ், திருவல்லிக்கேணி: இந்த ஆண்டு துவக்கமே, பகலில் கடும் வெயிலும், இரவில் பெரும் மழையுமாக இருக்கும். மத்திய ஆட்சியில் குழப்ப நிலை நீடிக்கும். ஆட்சி கவிழவும், தேர்தல் வரவும் வாய்ப்பு உண்டு. முதல்வர் ஜெயலலிதா, கட்சியை வளர்க்கும் பணியிலும், அதன் கட்டுக்கோப்பு கலையாமல் காக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபடுவார். தேசிய அரசியலில் முக்கிய அங்கம் வகிப்பார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். அரசியல் கட்சிகளால், தமிழக அரசுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படும். இந்தியா, உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். பஞ்சம், வறட்சி அதிகரித்தாலும், மக்களின் நல்வாழ்வுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நந்தன ஆண்டு துணை நிற்கும்.

சிவகுரு ரவி, விழுப்புரம்: தமிழகத்தில் விவசாயம் பெருகும். மின்சார பிரச்னை தீரும். திருநங்கைகள் அரசின் உதவி மூலம் சாதனை புரிவர். கோவில் வழிபாடு சிறப்படையும். பல இடங்களிலும் அரசியலில் ராஜ கலகம் நிகழும். முக்கிய கட்சிகளில் பிளவு, தலைவர்கள் திடீர் மரணம் ஆகியன நிகழும். அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை புரிவர். நிர்வாகத்தில், ஆளுங்கட்சிக்கு நற்பெயர் கிட்டும். அரசியலில் சென்னை மூலம் டில்லி ஆட்டுவிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா, வழக்குகளில் இருந்து விடுபடுவார். பங்குச் சந்தை உயரும். போலீஸ், ராணுவம், நீதித்துறை, ஊடகங்கள், கலைத்துறை சிறப்பாகச் செயல்படும். பதுக்கல் பணம் வெளிவரும். மொத்தத்தில், கெட்டவர்களின் கொட்டம் அடக்கப்படும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலை பெறும்.

ஜோதிடர் அ.செ.ந.சோமசேகரன், ஆற்காடு: நந்தன ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஜெயமளிக்கும். இவர் கால், மூட்டு வலியால் அவதிப்படுவார். கருணாநிதிக்கு கஷ்டமளிக்கும். ஸ்டாலினுக்கு நன்மை உண்டாகும், மருத்துவச் செலவு அதிகரிக்கும். விஜயகாந்த் சிரமப்பட வேண்டியிருக்கும். வைகோவின் போராட்டம் தொடரும். சோனியா உடல் நிலை பாதிப்படையும். அத்வானிக்கு ராஜ யோகம் உண்டு. மோடியால் பா.ஜ.,வின் பலம் அதிகரிக்கும். ராகுலின் செல்வாக்கு மேலோங்கும். கம்யூனிஸ்டுகள் தேய்வடையும். மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏழு முதல் ஏழரை சதம் அதிகரிக்கும். அண்டை நாடுகளின் தொல்லை அதிகரிக்கும். முல்லைப் பெரியாறு இழுபறி நீடிக்கும். சேது சமுத்திர திட்டம் வீணாகும். கலாசார சீரழிவு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தமிழகத்தில் ஆகஸ்ட் வரை பஞ்சமும், அதற்கு மேல் அதிக மழை பொழிவும் இருக்கும். கால்நடைகள் பாதிக்கும்.

ஜோதிடர் சந்துரு, மதுரை: நந்தன என்பதற்கு தூண்டுதல் என பொருள் உண்டு. அணையாமல் எரியும் விளக்கை நந்தா விளக்கு எனக் கூறுவர். இந்த ஆண்டுக்குரிய வெண்பாவில், மழை போதிய அளவு இருக்காது. விவசாயம் பாதிக்கும். மக்கள் நோய் நொடிக்கு ஆளாவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டில், வெப்பம் அதிகமாகும். நாட்டின் உயர் அதிகாரங்களில் உள்ளவர்களின் பொறுப்பு மாற்றி அமைக்கப்படும். பொருளாதார வளர்ச்சியில் பல மாற்றங்கள், புதிய திட்டங்கள் ஏற்படும். மருத்துவத்தில் சாதனைகள் இருக்கும். பயங்கரவாதிகளின் திட்டங்கள் செயலிழக்கும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விலகும். விளையாட்டுத் துறையில் ஏற்படும் வெற்றி உலகளவில் பேசப்படும். மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் குறையும். பல தடைகளை மீறி, தொழில் துறையில் உற்பத்தி விகிதம் கூடும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். இவ்வாறு ஜோதிடர்கள் நந்தன ஆண்டு பலனை கணித்துள்ளனர்.

No comments: