Tuesday, March 27, 2012


தலையை அழுத்தும் உனது வேலைப்பளுவுக்கிடையில் இதுவும் ஒரு கடமை என நினைத்து நீ இதனை வாசித்துக் கொண்டிருக்கக் கூடும்.. அல்லது உறக்கம் வராத மழைக்காலப் பின்னிரவொன்றில் காளான்களாய் முளைக்கும் என்னைப் பற்றிய நினைவுகள் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கலாம்..

மாலை நடைப்பயிற்சிக்குப் பின்பு சற்று ஓய்வாக ஹட்சன் நதிக்கரைப் புல்வெளியில் அமர்ந்து நதியின் சலனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது எனது புறங்கையில் விழுந்து பலநூறு முத்துக்களாய்ச் சிதறிய மழைத்துளியொன்று தான் உன் நினைவுகளை இழுத்து வந்து விட்டது.. மழைத்துளிகள் விழுவதையும், மறுகணம் உடைந்து மறைவதையும் கண்கொட்டாமல் ரசிக்க முடிகிற நம்மால், வாழ்வு உறவுகளை இணைப்பதையும், கணநேரத்தில் தொலைவில் நகர்த்தி விடுவதையும் ரசிக்க முடியாதிருப்பதும் தான் ஏனென்று புரியவில்லை.

இது போன்ற மழை நாட்க‌ளில் மணிக்கணக்காய் நாம் கதை பேசிய காலங்கள் நினைவிருக்கிறதா? எனக்குள் தேங்கிக் கிடந்த குழந்தைமையை, இறுகிக் கிடந்த சுயத்தை நீ வெளிக் கொண்டு வந்ததும், அசாத்தியப் பொறுமையுடன் எனது உளறல்களை நீ செவிமடுத்ததும்..  ம்ம்.. இன்று, பரபரக்கும் பெருநகர வாழ்வில் கனவுகளைத் துரத்தியபடி நீ ஓடிக் கொண்டிருக்கிறாய்.. பேசக் கிடைக்கும் அந்தச் சில நிமிடங்களிலும் சின்னச் சின்ன விசாரிப்புகள் மட்டுமே சாத்தியமாகிறது. யதார்த்தம் புரிந்தாலும் எப்படியோ வந்து விடுகின்றது சில கண்ணீர்த் துளிகள். 

இங்கேயும் மனிதர்கள் பலவிதமாகத்தானிருக்கிறார்கள். பழகுவதற்கு முன்பே நம்மைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். நெருங்கி வருவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதில் நம்மைப் பற்றிய அந்தப் பிம்பம் குறுக்கீடாக வந்து அவர்களை அலைக்கழிக்கும் போலும். ஒருவரை ஆழ்ந்து நேசிக்க அவ்வளவு எளிதாக முடிவதில்லை.

உறவுகளை அவரவர் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உன்னைப் போல எல்லோருக்கும் இருப்பதில்லை.  எதிர்பார்ப்புகளற்ற பிரியத்தைத் தந்தவன் நீ..  தனிமையிலும், பாட வேளைகளிலும், உறக்கம் கலைந்த அதிகாலையிலும் உள்ளம் கனத்துப் போவது இதனால் தானோ என்னவோ?.. இது போன்ற வெறுமையை,  பிரிவை நீயும் உணர்ந்திருக்கிறாயா?

பிறிதொரு நாளில் உன்னருகேயமர்ந்து இதுவரை பேசாத அனைத்தையும் பேச வாய்த்தால் ஒரு வேளை இதற்கான விடை கிடைக்கலாம். அதுவரை, உலகின் ஒரு கோடியில் நானும் மறுகோடியில் நீயுமென‌ அன்றாட அலைக்கழிதல்களுக்குள் நம்மைத் தொலைத்திருப்போம், நீ நீயாக.. நான் நானாக.. மாமரத்துக் கிளிகளையும், அணில்களையும் விசாரித்தேனென்று சொல்.. அம்மாவையும்..
thanks to tamil

No comments: