Saturday, April 27, 2013

தெய்வத்தின் குரல்


அன்பும் அருளும்
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழுமானால் குடும்பத்தின் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்சனைகளோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கிறோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்க முடியும்.
தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்கமுடியும்.
இன்று அவதார புருஷராக - நாயன்மாராக- உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ பெரியவர்கள் தாம்குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத்தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.
பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சன்னிதானத்தின்முன் நின்றால் ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர் பூந்தென்றல் நம் மேனியில் படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இவை அவர்கள் பால் முழு ஈடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை, (கடவுளிடமும் பெரியவர்களிடமும் முழுபக்தி கொண்ட கூட்டம் மட்டுமே அந்தச் சன்னிதானத்தின் முன்பு இத்தகைய இன்பானுபவ உணர்வையும் உரத்தையும் பெற முடியும்.)
பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள். உலக மக்களின் நன்மைக்காகவே நாழிகை தோறும் பூஜை செய்பவர்கள்.
அவர்கள் செய்த தவமும்-செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக்காக்கும் பேரறமும் இந்த உலகத்தை வளப்படுத்திக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணலாம்.
பெரியவர்கள் பல்துறை அறிவும் பல்களைச் செறிவும் பெற்றவர்கள். அவர்கள் நடமாடும் தெய்வம் மட்டுமல்ல. நடமாடும் பல்கலைக் கழகமும்கூட, அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து மக்கள் நல் அறிவு பெற, நாடு நலம் பெற, உலகம் உய்வு பெற, எத்தனையோ அறிவு மொழிகள் அறிவு உறை வடிவில் வந்துள்ளன.
மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் அவர்கள் வேதங்களிலிருந்தும் இதிகாச புராண சாஸ்திரங்களிலிருந்தும் எத்தனையோ மேற்கோள்கள் காட்டிப் பல்வேறு சந்தர்பங்களில் உரையாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுந்த குரல் காற்றோடு கலந்து போகாமல், என்றும் நின்று நிலவும் வண்ணம் தெய்வத்தின் குரலாகி அவை அச்சு ஏட்டில் பதிவாகிச் சிறந்த நூலாக இப்பொழுது வடிவெடுத்துள்ளது. சொர்ணமூர்த்தியின் எண்ண வடிவங்களே கருத்து வண்ண வடிவங்களாகியுள்ளன.
ஆசாரிய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ, இதிகாசங்களையோ வேதங்களையோ தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்குச் சாறு பிழிந்து தருவதுபோல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச் சாறுகள்.
இந்து மதத்தின் பெருமையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேதசாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச்சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வகைவில் ஒலிப்பதைக் கேட்கலாம், படிக்கலாம்.
மொத்தத்தில் இது ஒர் அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம், அறிஞர் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம், இந்த தெய்வத்தின் குரலை, பல டேப் களிலிருந்தும் கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர் காஞ்சிப் பெரியவர்ளிள் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு.ரா. கணபதி அவர்கள்.

No comments: