ஒருமுறை காளிங்கன் என்ற நாகம் யமுனை நதியை விஷமயமாக்கியது. அதில் குளிக்க வந்த பசுக்களையும், அவற்றை மேய்ப்பவர்களையும் சாகடித்தது. இதைக் கண்ட மற்ற மேய்ப்பர்கள் பகவான் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். கிருஷ்ணர் யமுனை நதிக்கரைக்கு வந்து. காளிங்கனிடம் சண்டைக்கு வருகிறாயா என்று சவால்விட்டார். பயங்கரமான சண்டைக்குப் பிறகு காளிங்கன் தோற்றது. பணிந்து போயிற்று! வெற்றி பெற்ற கிருஷ்ணர். காளிங்கனின் தலைமீது ஏறி நின்று வெற்றி நடனம் ஆடினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பசுக்களும், மேய்ப்பர்களும் அவரை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள். தோற்றுப்போன காளிங்கன் யமுனை நதியை விட்டே வெளியேறுகிறது. இனி யாரும் யமுனை நதியை விஷமிட்டு நாசப்படுத்த முடியாது என்று மகிழ்ந்தார்கள் மக்கள்.
இந்தப் புராணக் கதையினுள் இன்னொரு கதையும் இருக்கிறது. இந்தக் கதையின்படி, விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்த கிருஷ்ணர் உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. அதனால் நீ இந்த நதியை விட்டுப் போய்விடு! என்றார் அதற்குக் காளிங்கன் மறுத்துவிட்டது. ஏன் இங்கிருந்து போக மறுக்கிறாய்? என்று கிருஷ்ணர் கேட்க, இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியின் இந்த வளைவுப் பகுதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது? என்றது.
முதல் கதையில் காளிங்கன் வில்லன். இரண்டாவதில், காளிங்கன் பாதிக்கப்பட்டவன். இரண்டாவது கதை நம்மைக் கருணையோடும் அன்போடும் கவனிக்கச் சொல்கிறது. எல்லாக் கதைகளிலும் ஹீரோவும் உண்டு. வில்லனும் உண்டு. ஆனால் வில்லன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவைதான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. பேராசைக்கு இடம் கொடுக்கிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பாதிக்கப்பட்டவனுக்குள் வில்லத்தனம் விதைக்கப்பட்டு விடுகிறது என்பதால் கடுமையாக இருக்கின்றன என்பதால், நாம் அவற்றை மீறப் பார்க்கிறோம். அப்படி மீறுவதால், நாம் எதையும் செய்யலாம் என்ற விடுதலை உணர்வை அனுபவிக்கிறோம். விதிகள் நம்மைப் பாதுகாப்பற்றதாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும்போது, நாம் சட்டத்தை மீறுகிறவர்கள் ஆகிறோம். குற்றவாளிகள் ஆகிறோம்!
நாகமான காளிங்கனுக்கு கருடன்மீது பயம் இருந்தது. கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்று அது அஞ்சியது. அதனால் இருக்கிற இடத்திலேயே.... அதாவது யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. நதியில் இருந்து வெளியேற அதற்கு தைரியம் வரவில்லை. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. அதன்மூலம் அது வில்லனாகவும் மாறியது! கிருஷ்ணர் இதை உணர்ந்தார். அதனால்தான் தன் திருப் பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். அதுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் போன்ற அடையாளம். காளிங்கனாகிய என்னை எதுவும் செய்துவிடாதே... என்று அந்த நாகம் கருடனிடம் தெரிவிப்பதற்காக கிருஷ்ணர் தந்த அடையாளமாகவும் நாம் அதை எடுத்துக்கொள்ளலாம்.
இந்துப் புராணங்களில் கடவுள் சாதாரணமாக வில்லனைக் கொல்வதில்லை. மாறாக அவனுக்கு விமோசனம் அளிக்கிறார். விடுதலை மாதிரிதான் அது. பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் (வில்லன் உட்பட) காப்பாற்றப்பட வேண்டியவர்தான். அதைத்தான் இரண்டாவது கதை சொல்கிறது. இன்றைக்குத் தப்பு செய்கிறவர்கள் பலரையும் நாம் வில்லனாகப் பார்க்கிறோம்; அடிக்கிறோம், உதைக்கிறோம், அபராதம் வாங்குகிறோம்; தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். இப்படி, அவர்களுக்குத் தண்டனை மட்டும் கொடுத்தால் போதாது; அதனுடன் அவர்களுக்கு விமோசனம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். நமக்குள் எழும் சினத்தையும் ஆத்திரத்தையும் காட்டுவதைவிட, பக்குவ நிலையில் யோசித்துப் பார்க்க வேண்டும். பக்குவ நிலை வராவிட்டாலும், அதைப்பெற முயற்சியாவது செய்ய வேண்டும். அதுதான் ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் அழகு!
No comments:
Post a Comment