திடீர் உடல் எடை குறைவா? நோய் இருக்கலாம்!
Published: சனிக்கிழமை, ஜூலை 21, 2012, 10:42 [IST]
Updated: சனிக்கிழமை, ஜூலை 21, 2012, 10:54 [IST]
குண்டாக இருப்பவர்கள் எல்லோரும் நோயாளிகளைப் போலவும், ஒல்லியாக இருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமானவர்களைப் போலவும் இன்றைக்கு கருதப்படுகின்றனர். ஆனால் திடீரென உடல் எடை குறைந்து போவது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பது ஒருபக்கம் இருந்தாலும் எந்தவித காரணமும் இன்றி எடை குறைவது ஆபத்தான அறிகுறி என்று அவர்கள் கூறியுள்ளனர். வயிற்றில் புற்றுக்கட்டிகள் இருந்தாலோ, அமிபியாசிஸ், அல்சர் குடல் அழற்சி, பூச்சிகள், குடல் காச நோய் போன்றவை காரணமாகவும் உடல் எடை குறையலாம்.
உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல் அடைப்புகள், பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்களால் உடல் எடை குறையும்.
கணையம், கல்லீரல், சார்ந்த கட்டிகள் கணைய அழற்சி, கல்லீரல் சுருங்கி விடுவது. பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள். நீரிழிவு, தைராய்டு நச்சுத் தன்மை, அடிஷன் வியாதி, சிமெண்ட் வியாதி போன்ற நாளமில்லா சுரப்பி சார்ந்த வியாதிகள் இருந்தாலும் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
பசியிருந்தும் நன்றாக சாப்பிட்டும் உடல் இளைத்து போனால், நீரிழிவு, தைராய்டு பிரச்சினை இருக்காலாம் என்று கண்டறியலாம். அதேபோல் திடீரென எடைகுறைந்து போனால் நீரிழிவு, காச நோய் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாள்பட்ட காய்ச்சல், எச்சலில் இரத்தம் வருவது. இருமல் காசநோயாக இருக்கலாம்.
அதிக வேலைப்பளு காரணமாக ஏற்படும் அழுத்தம், பரபரப்பு மிகுந்த வாழ்க்கை, உறக்கமின்மை, வலி உபாதைகள் போன்றவற்றாலும் உடல் மெலியக் கூடும். அட்ரினல் பற்றாக்குறையால் உடல் மீது நிறமிப்புள்ளிகளோடு எடை குறையலாம். நரம்புத் தளர்ச்சி, மனச்சோர்வு, இருந்தாலும் உடல் மெலியக் கூடும்.
ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகள் உடல் எடை குறைந்து போவதுண்டு அதே சமயம் இளைஞர்களோ, பெரியவர்களோ உடல் எடை குறைய நேரிட்டால் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்