Friday, July 20, 2012

இடும்பாவனம்.


அரசனோ, அரக்கியோ அது எவராயினும் நம்பி வந்தவரை விடாது காப்பாற்றுகிறான், ஈசன். அவனுக்கு எல்லோரும் ஒன்றுதான். அவனின் கருணைக்கு காரணமில்லை. அப்படிக் காரணமற்று ஓர் அரக்கிக்கு கருணை பொழிந்த தலம்தான் இடும்பாவனம். இந்தத் தலம் தமிழ் மொழியின் தொன்மைக்கு நிகரானது என்றால் அது மிகையில்லை. வரலாற்றுப் பழமையும் பதிகம் பெற்ற பெருமையும் பிரமாண்ட புராணம் வியந்து விவரிக்கும் சிறப்பையும்  தன்னகத்தே கொண்டது, இத்தலம் அந்த வில்வவனக் காட்டிற்குள் இடும்பன், இடும்பை எனும் அசுர சகோதர-சகோதரி வாழ்ந்து வந்தனர். பிறப்பிற்கேற்றார்போல தேவைப்பட்டால் மானிடரைக் கூட கொன்று பசி தீர்த்துக் கொண்டனர். அந்தக் காட்டில் வில்வத்தின் மணம் திடீரென இடும்பையை ஈர்த்தது. ஏனோ அவளுக்குள் பூர்வ ஜென்ம வாசனை மணத்தது. தான் இந்த ஜென்மத்தில் மட்டும்தான் அரக்கியாக இருக்கிறோமா என்று சந்தேகம் தோன்றியது. இந்த ஐயம் தோன்றிய நாள் முதல், அவள் மாமிசத்தை ஒதுக்கினாள். பூமியை கீறி கிழங்கு நோண்டித் தின்றாள். உதிர்ந்த பழங்களை உண்டு பசி போக்கிக் கொண்டாள். மெதுவாக கானகத்தின் ஒரு கோடிக்கும் மறு கோடிக்கும் காலாற நடந்தாள். தன்னை ஏதோவொரு சக்தி சாந்தப்படுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தே இருந்தாள்.

சட்டென்று ஒருநாள் மாபெரும் வில்வ விருட்சங்களின் மத்தியில் பிரம்மதேவன் அமைத்த கோயிலை அரனருளால் கண்டாள். பூர்வ ஜென்ம நல்வினையால் ஈசனின் சந்நதியை அடைந்தவள் அவன் அருளில் நனைந்தாள். ஈசனும் அருட்பார்வை பார்த்தான். சிவலிங்கத் திருவுருவை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினாள். எப்படி தனக்கு வணங்கத் தெரிந்தது என்று தனக்குத்தானே வியந்தாள். தொடர்ந்து அந்தக் கோயிலிலேயே வெகுகாலம் கழித்தாள். இடும்பைக்குள் ஈசன் தம் இன்னருளை பொழிந்தான். வெளியே அரக்கி முகத்தோடு இருந்தாலும் உள்ளுக்குள் பரம பக்தையாக திகழ்ந்தாள்.
இந்த நேரத்தில்தான் ஈசன் வேறொரு விளையாடலைத் தொடங்கினான்.

துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை அழிக்க வேண்டுமென்று அரக்கு மாளிகையை தேர்ந்த சிற்பியைக் கொண்டு உருவாக்கினான். சிற்பிக்குள் சத்தியவானாக இருந்த ஒருவன், அதை பீமனிடம் சொல்லி விட்டான். ‘‘அரக்கு மாளிகைக்குள் சுரங்கம் அமைத்திருக்கிறேன். அச்சுரங்கத்தை வில்வக் காட்டுக்குச் சென்று சேரும்படி அமைத்திருக்கிறேன்’’ என்றான். அரக்கு மாளிகை எரிந்தது. துரியோதனன் ஆனந்தமாகச் சிரித்தான். அதற்குள் பஞ்ச பாண்டவர்கள் சுரங்கத்தின் வழியாக வெகுதூரம் பயணித்து வில்வவனத்தை அடைந்தனர். களைப்பின் மிகுதியால் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பீமன் காவல் காத்தான். அப்போது அங்கு இடும்பை வந்தாள். ஆஜானுபாகுவாய் வீற்றிருந்தவனை கண்டவுடன் மெய்சிலிர்த்தாள். உணர்ச்சி வயப்பட்டவளாக தன்னை மீறி அவன் மீது காதல் கொண்டாள்.

ஆனால், பீமனோ, ‘‘நீ இங்கிருந்து வெளியேறு. இல்லையேல் உனக்கு தீங்குண்டாகும்’’ என்றான். ‘‘எப்படி நான் சொல்வதென்று தெரியவில்லை. இந்த வில்வவனத்தில் வீற்றிருக்கும் சற்குணேஸ்வரரே, நீங்கள்தான் என் கணவர் என்று உள்ளுக்குள் நின்று சொல்கிறார். இது என் முயற்சியையும் மீறி நடந்து கொண்டிருக்கிறது’’ என்று பீமனின் இதயத்தைத் தொட்டாள்.

பீமனும் அவளை மறுக்க முயன்று தோற்றான். எங்கேயோ, எப்போதோ, இவளுடன் வாழ்ந்த நினைவுகள் மேலே வருவதாக உணர்ந்தான். நெஞ்சம் கனிந்து அவளை ஏற்றான். விவரம் அறிந்து இடும்பையின் சகோதரன் இடும்பன், பீமன் மீது பாய்ந்தான். கடுமையாகத் தாக்கினான். முதலில் நிலைகுலைந்த பீமன் பின்னர் சமாளித்தான். முதலில் போர் வேண்டாமே என்று பீமன் சொல்லிப் பார்த்தான். இடும்பனோ, ‘‘உன்னைக் கொன்று புசிக்காமல் விடேன்’’ என்று இடும்பியின் பேச்சைக் கூட கேளாமல் போரிட்டான். கடும் போரில் இடும்பன் மாண்டான். பீமன் இடும்பையின் கரம் பற்றி தமது சகோதரர்களிடம் சென்று நடந்ததை விவரித்தான்.

அப்போது அங்கே வியாச மகரிஷியும் வந்தார். ‘‘பீமா, இவள் இப்பிறப்பில் இடும்பை. முற்பிறப்பில் கமலக்கன்னி. உன்னை காதலித்தவள். சிவனடியாரை அலட்சியப்படுத்தியதால் அரக்கி உருவம் பெற்றாள். இதோ இங்கு சற்குணேஸ்வரரை வழிபட்டு உள்ளம் தெளிந்திருக்கிறாள். இப்போது உடலும் பழைய உருவமாக மாற அதோ அங்கிருக்கும் சீரபுஷ்கரணியில் மூழ்கி எழுந்து வா’’ என்று இடும்பையை நோக்கிக் கட்டளையிட்டார்.

இடும்பை சீரபுஷ்கரணியில் மூழ்கி எழுந்தாள். அம்பிகையைப்போல அழகாக மாறினாள். பீமனைக் கண்டு நாணத்தில் முகம் சிவந்தாள். சற்குணேஸ்வரனின் முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. வானிலிருந்து தேவர்கள் வாழ்த்தினர். ‘‘துரியோதனனின் தீச்செயல் ஒருவிதத்தில் இடும்பையை உங்களுக்கு தந்ததுபோல் ஆயிற்று’’ என்று வியாசர் ஆசி மொழிந்தார். பின்னர் பாண்டவர்கள் இத்தலத்திலேயே ஓராண்டு வாசம் செய்து நாடு திரும்பினர்.

இப்படி இடும்பையால் பூஜிக்கப்பட்டு ஆராதிக்கப்பட்ட தலமாதலால் அவளின் திருப்பெயரிலேயே திருஇடும்பாவனம் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலின் பிரதான விஷயமே இது பிதுர் முக்தித் தலம் என்பதேயாகும். இறந்த முன்னோர்களை நினைத்து செய்யப்படும் மகேஸ்வர பூஜை பல தலைமுறைகளுக்கு முன்புள்ளோரையும் முக்திப் பதத்தில் சேர்க்கின்றது. ‘திருவாதிரை, பரணி, மகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தல ஈசனுக்கு முன்னோர்களின் பொருட்டு ஆகம முறைப்படி பூஜைகளும் அர்ச்சனை, அபிஷேகங்களும் செய்தால் முன்னோர்கள் எளிதாக மோட்சம் எய்துவது திண்ணமாகும்’ என்று சூத முனிவர் பிரமாண்ட புராணத்திலுள்ள இத்தலம் பற்றி கூறுகிறார்.

மூலவராக கருவறையில் சற்குணேஸ்வரர் பேரருள் பொழிந்தபடி வீற்றிருக்கிறார். புராண புருஷர்களால் ஆராதிக்கப்பட்ட மூர்த்தியை பிற்காலத்தில் வந்த சமயக் குரவர்களான திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் திருப்பதிகங்கள் பாடி வழிபட்டனர். ஞானசம்பந்தப்பெருமான் இத்தல ஈசனை தரிசிக்க வேண்டுமென நினைத்தவுடனேயே இத்தலத்திலுள்ள மணல்கள் எல்லாம் சிவலிங்கமாக காட்சி தந்தனவாம். அதனாலேயே சம்பந்தக் குழந்தை சிவிகை மீதமர்ந்து பயணிக்காமல், கால்களாலும் சிவ மணல்களை மிதிக்காமல், தலைகீழாக கைகளாலேயே நடந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. அகத்தியருக்கு திருமணக்கோலத்தை காட்டியருளியவரும் இந்த சற்குணேஸ்வரரே. மங்களநாயகி எனும் திருப்பெயரோடு அம்பாள் அபய-வரத ஹஸ்தம் காட்டி அருளைப் பொழிகிறாள்.

இத்தலத்தைப் பற்றி பிரமாண்ட புராணம் பல அத்தியாயங்களில் விவரிக்கிறது. எத்தனை பக்தர்கள், எவ்வளவு ரிஷிகள், தேவர்கள், யமன் என்று எத்தனையோ பெரியோர்கள் வந்து சற்குணேஸ்வரரை வணங்கியிருக்கின்றனர். இன்றும் அருவமாக வணங்கித் துதித்தபடி இருக்கின்றனர். வேண்டிக் கொண்டோருக்கு மட்டும் முக்தி தராமல் அவர்களின் பல தலைமுறைகளை கரையேற்றுகிறார் இடும்பாவனத்து ஈசன். திருவாரூர் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள திருத்துறைப்பூண்டியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது, திருஇடும்பாவனம்.
- கிருஷ்ணா

No comments: