காற்றில் கரையும் பணம்: உரத்த சிந்தனை: வி.கோபாலன்
இந்தியப் பொருளாதாரம், தற்போது ஒரு நெருக்கடியான நிலையில் இருக்கிறது. அதற்கான காரணங்கள் என்ன?
* கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணவீக்கம், மிக அதிகமாக இருக்கிறது. சராசரி மக்களின் அன்றாட அவசியத் தேவைகளான, உணவுப் பொருட்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது. இதனால், நடுத்தர மற்றும் அடிமட்டத்திலுள்ள மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
* மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையால், அரசின் கடன் சுமை ஏறிக் கொண்டே போகிறது. வளர்ச்சி பணிகளுக்கு செலவழிக்க வேண்டி, கடன் வாங்கிய தொகையின் பெரும் பகுதியை, நிர்வாக செலவினங்களுக்கு அரசு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
* நாட்டின் நிதிக் கொள்கையை வகுக்கும் பொறுப்பிலிருக்கும் ரிசர்வ் வங்கி, செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, நிதிக் கொள்கையை அறிவிக்கும் ரிசர்வ் வங்கி, ஜூன் 18ம் தேதி அறிவிப்பில், "வட்டி விகிதத்தில் ஒன்றும் மாற்றம் இல்லை. ரிசர்வ் வங்கியில், மற்ற வங்கிகள் வைக்க வேண்டிய கட்டாய தொகையின் அளவு, 4.75 சதவீதமாகவே இருக்கும்' என, தெரிவித்தது. இதனால், ரிசர்வ் வங்கியிலிருந்து, மற்ற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம், தொடர்ந்து, 8 சதவீதமாகவே இருக்கும். இதன் எதிரொலியாக, தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, தொழிலதிபர்கள் மத்தியில் ஏமாற்றம், கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அதிக வட்டிவிகிதம், நாட்டின் உற்பத்தி அளவை குறைக்கும் என்று தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
* நமது ஏற்றுமதியை விட, இறக்குமதி, அதிகமாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் நமது ஏற்றுமதியின் மதிப்பு, 300 பில்லியன் டாலர்; இறக்குமதி, 482 பில்லியன் டாலர். இந்த இறக்குமதி பற்றாக்குறையான, 182 பில்லியன் டாலர், நடப்பு கணக்கில் ஒரு பெரிய தொய்வை ஏற்படுத்த இருக்கிறது.(ஒரு பில்லியன் என்பது, 100 கோடி, ஒரு டாலர் மதிப்பு, 55 ரூபாய்)
* போதாததற்கு, உலக நாடுகளின் நாணய தரத்தை நிர்ணயிக்கும் சர்வதேச நிறுவனங்கள், நம் நாட்டின் நாணய தரத்தை சமீபத்தில், வெகுவாக குறைத்து விட்டன. இதனால், சர்வதேச நாணய சந்தையில், நமக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய காரணங்களாலேயே, ரூபாயின் பரிவர்த்தனை விகிதம், அமெரிக்க டாலருக்கு எதிராக, கடந்த இரு மாதங்களில், "டமார்' என, கீழே வீழ்ந்து விட்டது.
ஜூன் 2011ல், ஒரு அமெரிக்க டாலருக்கு, இந்திய ரூபாய் மதிப்பு, 44 என்பதிலிருந்து, ஜூன் 22, 2012ல், 57 ரூபாய்க்கும் அதிகமாகி விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் இது, 50 ரூபாயாக இருந்தது. இந்த மதிப்பு வீழ்ச்சியால், அதிகம் பாதிக்கப்படுவது நம் கவுரவம் மட்டுமல்ல; இறக்குமதி பொருள்களுக்காக, நாம் செலுத்த வேண்டிய அதிக பணமும் தான். இரண்டாவது உலக போரால், பொருளாதார பிரச்னையில் அதிகமாக பாதிக்கப்படாத நாடு அமெரிக்கா ஒன்று தான். அதற்கு காரணம், இரண்டாவது உலக போர் களம் பெரும்பாலும் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் இருந்தது தான். வருங்காலத்திலும் அமெரிக்காவின் பொருளாதாரம் சிரமப்படாமல் இருக்க வேண்டுமென்றால், மற்றைய நாடுகளின் பொருளாதாரம் சீரடைய வேண்டும் என்ற உண்மையை அமெரிக்கா உணர்ந்தது. அதன் விளைவு தான், அமெரிக்கா, "மார்ஷல் உதவி' என்ற மிகப்பெரிய பொருளாதார உதவிக்கான திட்டத்தை தீட்டியது. இதன் மூலம், இரண்டாவது உலக போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஜெர்மனி, இத்தாலி உட்பட, இந்த உதவி சென்றடைந்தது. அதேநேரத்தில், உலகின் எல்லா நாடுகளும் ஒரு சர்வதேச நிதி ஸ்தாபனத்தை நிறுவுவதில் ஆர்வம் காட்டின. அதற்காக உலக நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் உள்ள, "பிரிட்டான் உட்ஸ்' என்ற இடத்தில் கூடினர். அப்போது, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, இந்த கூட்டத்திற்கு, இந்தியாவின் பிரதிநிதியாக, தமிழரான ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரை அனுப்பி வைத்தது. பொருளாதார மேதையான இவரது சொந்த ஊர் கோவை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நேரு, இவரைத் தான் தன் அமைச்சரவையில் நிதியமைச்சராக சேர்த்துக் கொண்டார்; சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெயரையும், ஷண்முகம் செட்டியார் பெற்றார்.
"பிரிட்டான் உட்சில்' கூடிய உலக நாடுகளின் பிரதிநிதிகள், இரண்டு சர்வதேச நாணய ஸ்தாபனங்களை நிறுவ அடிக்கோல் போட்டனர். ஒன்று: உலக வங்கி; மற்றொன்று: சர்வதேச நாணய வைப்பு நிதி. இந்த ஸ்தாபனங்களின் நோக்கம், உலகில் சிரமப்படும் நாடுகளுக்கு கடன் வழங்குவதும், உலக நாடுகளுக்கிடையே நாணய பரிவர்த்தனையின் அளவை நிர்ணயிப்பதும் தான். அந்தக் காலகட்டத்தில், 1945 முதல், 1955 வரை, "இன்டர்நேஷனல் மானிட்டரி பண்டு (ஐ.எம்.எப்.,) இந்திய ரூபாய்க்கான நாணய பரிவர்த்தனை விகிதத்தை, ஒரு டாலருக்கு, 4 ரூபாய் என்றும், பிரிட்டிஷ் ஸ்டர்லிங்குக்கு, 15 ரூபாய் என்றும் நிர்ணயித்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு, நடைமுறையில் இந்த விகிதம் உண்மை நிலைக்கு ஒத்துவரவில்லை. கடந்த, 1945 - 55 கால கட்டத்திலும், அதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகும், நம் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. ஆனால், அமெரிக்க மார்ஷல் உதவியை பெற்ற ஐரோப்பிய நாடுகள், பொருளாதார வளர்ச்சியில் நன்றாக முன்னேறின. அதிக உதவியைப் பெறாத ஜப்பானும், தன் சொந்த முயற்சியால் பொருளாதாரத்தில், கிடு கிடு வென்று வளர்ந்தது. அதேநேரத்தில், இந்திய ரூபாயின் வாங்கும் திறன், மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் நாணயத்தின் வாங்கும் திறனோடு ஒப்பிட்டால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த அளவிலேயே இருந்தது. அதனால், ஐ.எம்.எப்.,ன் ஆலோசனைக்கு ஏற்ப, 1960 - 70ம் ஆண்டுகளில், இந்தியா, இரண்டு முறை ரூபாயின் மதிப்பை குறைக்க வேண்டியதாயிற்று. இதனால், அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் முதலில், 6 ரூபாயாகி, பின் 10 ரூபாய் வரை என்ற நிலை ஏற்பட்டது.
கடந்த, 1970 களில், ஐ.எம்.எப்., உலக நாடுகளின் நாணய பரிவர்த்தனை விகிதம் நிர்ணயிக்கப்பட்ட முறை, சரியாக செயல்படவில்லை என்பதை உணர்ந்தது. பல நாடுகளும் இதே கருத்தை கொண்டிருந்தன. அதனால், உலக நாடுகளின் கருத்தை ஏற்று, ஐ.எம்.எப்., நாணய பரிவர்த்தனை விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை கைவிட்டு விட்டு, எல்லா நாடுகளும் அதனதன் பொருளாதார வளர்ச்சி கையிருப்புக்கு ஏற்ப, நாணயத்தின் மதிப்பை சந்தை வியாபாரத்தின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் என, தெரிவித்து விட்டது. அனேகமாக எல்லா நாட்டு நாணயங்களும், அமெரிக்க டாலரை அடிப்படை மதிப்பாக கொண்டு, மற்ற நாட்டு நாணயங்களுடன் பரிவர்த்தனை விகிதத்தை தீர்மானிக்க ஆரம்பித்தன; இந்த விகிதம் அன்றாடம் மாறுகிறது.
இங்கே ஒரு உண்மை நிலையை பார்ப்போம்... 1970ல் இந்திய ரூபாய் ஒரு டாலருக்கு, 10 என்ற கணக்கிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, 1990ல், 20 ரூபாயாகவும்; 1995ல், 35 ரூபாயாகவும் ஆனது. இதற்கு முக்கிய காரணம், 1995 வரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஒரு தேக்க நிலையில் இருந்தது தான். கடந்த, 1991ல், அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங், சில துணிச்சலான முடிவுகளை எடுத்த பிறகு, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் செல்ல ஆரம்பித்தது. ஆனால், மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். இந்த, 20 ஆண்டு தாமதத்தை குறைக்க வேண்டுமானால், சில கடுமையான முடிவுகளை ஏற்க வேண்டும். இங்கே, "ஓட்டு வங்கி' குறுக்கிடுகிறது. இருந்தாலும், ஓரளவு வளர்ச்சி பாதையில் போய்க் கொண்டிருந்த நம் நாடு, கடந்த இரு ஆண்டுகளில், பெரிய தொய்வை கண்டிருக்கிறது. ஏற்றுமதியை அதிகரிக்க தவறிவிட்டோம். கண்ணை மூடிக் கொண்டு, இறக்குமதியை அதிகளவில் அனுமதித்து இருக்கிறோம். நாட்டின் கையிருப்பு அன்னிய செலாவணியும், வெளிநாட்டு கடனும் அனேகமாக சமநிலையில் இருக்கின்றன. இந்தக் காரணங்களால் தான், நம் ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதிலிருந்து மீள, முதலில் சொன்ன ஐந்து காரணங்களை மனதில் வைத்து, அதற்கேற்ப நிவாரணம் தேட வேண்டும். அந்த நிவாரணம் அரை குறையாக இல்லாமல், நிரந்தர நோக்கில் இருக்க வேண்டும்
No comments:
Post a Comment