"காலம் மாறி விட்டது!' வீட்டுத் தோட்டம் அமைத்து, அதிலேயே நர்சரியையும் உருவாக்கி, தோட்டம் போடுபவர்களுக்கு உதவும் சித்ரா: முன்பெல்லாம், ஒரு மரம் வைத்தால், அது பலன் தர, 10 முதல், 15 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால், இன்று, குறுகிய காலத்தில் பலன் தரக் கூடிய ரகங்கள் வந்து விட்டன. என்னிடமும் இப்போது நிறைய ரகங்கள் உள்ளன. வெறுமனே, செடி கொடிகள் மட்டும் விற்றால் போதும் என நினைக்கும் வியாபார நோக்கம் என்னிடம் இல்லை. இங்கு என்ன செடி வாங்கினாலும், அதற்கேற்ற இயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து, தொட்டி என, இவற்றை சேர்த்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் எப்படித் தயாரிப்பது என்ற விவரங்களையும், சொல்லிக் கொடுக்கிறேன். ரோஜா செடியை, வளர வளர, வெட்ட வேண்டும். ஏறக்குறைய குத்துச் செடி போலத் தான், ரோஜாவை வளர்க்க வேண்டும். அப்போது தான் செடியின் ஆயுள் கூடும்; பூவும் அதிகமாகப் பூக்கும். பூச்சி தாக்கிய செடிகளுக்கு, வேப்ப எண்ணெய், "ஸ்பிரே' செய்யும் வழக்கம் சிலரிடம் உள்ளது; இது தவறானது. வேப்ப எண்ணெய் படிந்த இலைகளின் மேல், புழுதிக் காற்று படியும்போது, அதன் இலைகள் அழுக்கேறி விடும். பின், அந்த இலைகள், எதற்குமே பயன்படுத்த முடியாமல் போய்விடும். வேப்ப எண்ணெய்க்கு பதில், வேப்பிலை சாறு பயன்படுத்தலாம். வீட்டில் உரம் தயாரிக்க முடியாதவர்கள், நர்சரிகளில், "ஆர்கானிக் உரம்' வாங்கிப் பயன்படுத்தலாம். செடிக்கு உரம் போட்டு விட்டு, அப்படியே விடக் கூடாது; உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்; இல்லாவிடில், உரத்தின் உஷ்ணம், செடியைப் பாதித்து விடும். தொட்டிச் செடிகளில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றக் கூடாது. அதிகமாக தண்ணீர் ஊற்றினால், செடியின் வேர்ப் பகுதியில் உள்ள மண்ணில், கொசு உற்பத்தியாகி விடும். அதிகத் தண்ணீரால், செடிகளின் வேர் அழுகிப் போவதற்கு கூட வாய்ப்புண்டு.
No comments:
Post a Comment