காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏழு தலை பாம்பு பிடிபட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து, சாலையில் ஏழு தலையுடன் கூடிய பாம்பு படமெடுத்து ஆடுவது போல், கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட புகைப்படம், அலைபேசி மூலம் வேகமாக பரவி வருகிறது.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம், இரவில் ரத்தக்காட்டேரி உலா வருவதாகவும், அது, வீட்டிற்குள் நுழைவதை தடுக்க, நுழைவு வாயிலில், "இன்று போய் நாளை வா' என, சிகப்பு வண்ணத்தில் எழுதி வைக்க வேண்டும், எனவும் வதந்தி பரவியது. அதை நம்பி, ஏராளமானோர் தங்கள் வீடுகளில், சூலம் படம் வரைந்து, "இன்று போய் நாளை வா' என, சிகப்பு வண்ணத்தில் எழுதி வைத்தனர். சிலர் மனித முகத்தை படமாக வரைந்து வைத்தனர். சிலர், 'ஸ்வஸ்திக்' குறியீட்டை வரைந்து வைத்தனர்.
ஏழு தலை நாகம்: அடுத்த கட்டமாக, ஏழு தலை நாகம் உலா வருவதாக வதந்தி பரவத் துவங்கி உள்ளது. கடந்த வாரம் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், ஏழு தலை நாகம் வந்ததாகவும், அதை சிலர் புகைப்படம் எடுத்ததாகவும், அதன்பிறகு அந்த நாகம் மறைந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. தகவல் கூறியவர்களிடம், நீங்கள் பார்த்தீர்களா எனக் கேட்டால், "நான் பார்க்கவில்லை, என் நண்பன் சொன்னான்' என்றனர். அவர்களைக் கேட்டாலும், அதே தகவலை தெரிவித்தனர். நேரில் பார்த்தவர்கள் உண்டா என விசாரித்தால், யாரும் இல்லை.
"கிராபிக்ஸ்' படம்: இச்சூழலில், ஏழு தலை நாகம் படமெடுத்து ஆடுவதை, புகைப்படம் எடுத்துள்ளதாகக் கூறி, "புளூடூத்' மூலம் சிலர் அலைபேசிகளுக்கு அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்பட்ட படத்தை வாங்கி, கணினி வல்லுனர்களிடம் காண்பித்தபோது, "கிராபிக்ஸ்' உதவியுடன், சாலையோரம் ஏழு தலை பாம்பு படமெடுத்திருப்பதைப் போல் வடிவமைத்து, உலவ விட்டிருப்பது தெரிய வந்தது. இப்படம் தற்போது காஞ்சிபுரம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. இப்படத்தை சிலர் உண்மை என நம்பி, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பி வருகின்றனர். அவர்களிடம் இது கிராபிக்ஸ் எனக் கூறினாலும், நம்ப மறுக்கின்றனர். "கலிகாலம் முடிவடைய உள்ளதால், ஏழு தலை நாகம் வெளியில் வரத் துவங்கிவிட்டது. பலர் நேரில் பார்த்துள்ளனர். நீங்கள் கூறுவது தான் பொய்' எனக் கூறி, உண்மையை கூறுவோரின் வாயை அடக்குகின்றனர். இதுபோன்ற நபர்களால், காஞ்சிபுரம் நகரில், "ஏழு தலை நாகம்' புகைப்படம், வேகமாகப் பரவி வருகிறது.
No comments:
Post a Comment