Wednesday, May 23, 2012


       "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை                                                                                                                                                                   சென்னை:இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தால் போதும், கார்ப்பரேட் நிறுவனத்தில் எக்கச்சக்க சம்பளத்தில் வேலை கிடைத்தது போன்ற மனப்பாங்கு, இன்றைய மாணவர்களையும், பெற்றோரையும், இன்ஜினியரிங் படிப்பு மீது, அதீத மோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கடந்தாண்டில், இன்ஜினியரிங் முடித்த சுமார், 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை.
வெறும் மோகத்தால், இன்ஜினியரிங் படிப்பில் கண்ணை மூடிக்கொண்டு சேரும் மாணவர்களின் அதிகரிப்பால், 1997ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, 277 இன்ஜினியரிங் கல்லூரிகள் தான் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இருமடங்காக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் புதியதாக மேலும், 15 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.

இவ்வாறு தமிழகத்தில் ஆண்டுதோறும், இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்வோடு, புதியது புதியதாக உருவாகும் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளும், அவற்றின் மாணவர் சேர்க்கை இடங்களும் அதிகரித்து, 2.5 லட்சமாக உச்சானிக்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நாடுமுழுவதும், 15 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும், 2.25 லட்சமாக உள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளும், மாணவர் சேர்க்கை இடங்களும் உயர்ந்த அளவிற்கு, அதற்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளனவா? வேலைவாய்ப்புக்கு ஏற்ற தகுதிகளையும், திறமையையும் பெற்று கல்லூரியை விட்டு வெளிவருகின்றனரா?

தெளிவான சிந்தனையும், உண்மையான ஆர்வமும் இன்றி, மாயையில் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்பவர்கள் எண்ணிக்கை கணிசம். இந்நிலையில், தற்போது தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய ஒரே வாரத்தில், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துவிட்டன. இதற்கு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தால் போதும் வேலையும், கைநிறைய சம்பளமும் கிடைத்துவிடும் என்பது போன்ற, மாயை தான் முக்கிய காரணம் என்பதை உணரமுடிகிறது.உண்மையான ஆர்வமின்றி, வெறும் மோகத்தால் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து, பிறகு படிப்பை தொடரவும் முடியாமல், நிறைவு செய்யவும் முடியாமல் தவிக்கும் மாணவர்களையும் காண முடிகிறது. விளைவு, தமிழகத்தில் 10 சதவீதம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தான் உண்மையான வேலைத் திறன் பெற்றுள்ளனர் என்கிறது ஆய்வு.

தரமான மாணவர்களுக்கு மட்டுமே சிறந்த வேலை வாய்ப்பு என்பது இன்ஜினியரிங் துறையில் நிதர்சனம். இதற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான அனுபமிக்க ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ள தரமான கல்லூரிகளும், முக்கிய காரணமாக அமைகிறது என்கின்றனர், கல்வியாளர்கள்.

""மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். படிப்பை நிறைவு செய்யாமலும், வேலை கிடைக்காதவர்களும், மீதமுள்ள 20 சதவீதத்தினர்'' என்கிறார், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

சிறந்த கல்லூரிகளில் அனைத்து மாணவர்களாலும் இடம் பெற முடியாது. சராசரிக்கும் அதிகமான மதிப்பெண் பெறும் மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் தர கல்லூரிகளில் சேர்க்கை பெறுகின்றனர். எப்படியாவது இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தரமற்ற கல்லூரிகளில் பலர் சேர்கின்றனர். அதன்பிறகும், படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல், போதிய வேலைவாய்ப்பு திறன்களையும் வளர்த்துக்கொள்ளாமல் வேலை இல்லாத இன்ஜினியரிங் மாணவர்களும், ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை, கடந்தாண்டில் சுமார் 50 ஆயிரம்.மாணவர்கள் பலரும் இன்ஜினியரிங் என்று சென்றுவிடுவதால், பிற துறைகளில் திறமையுள்ளவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு, மனிதவளம் தேவையுள்ள பல்வேறு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையும், மிகக் குறைவான ஆட்களே தேவைப்படும் பணியிடங்களுக்கு, பெரும் போட்டியும் நிலவிவருகிறது.

இன்ஜினியரிங் படித்த அனைவருக்கும் பெரிய நிறுவனங்களில், உயர் சம்பளத்தில் வேலை கிடைப்பது சாத்தியமில்லை. இன்ஜினியரிங் தவிர, அனிமேஷன், பிசியோதெரபி, மரைன், சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், மீடியா, சுற்றுலா மற்றும் பி.ஏ. பொருளியல், பி.எஸ்சி., பி.காம்., போன்ற பல்வேறு கலை அறிவியல் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளும், பிரகாசமாக உள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள்.எனவே மாயையை தவிர்த்து, வாய்ப்புகள் மிகுந்த பிற துறைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் பெற வேண்டும். துறை சார்ந்த அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்வதன் அவசியத்தையும், மாணவர்கள் உணரவேண்டும்.

No comments: