செல்போன் கதிர்வீச்சால் தீங்கு ஏற்பட்டதாக தகவல் இல்லை
புதுடெல்லி,மார்ச்.31 - செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ அல்லது எந்தவித உயிரினங்களுக்கோ தீங்கான விளைவு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவில்லை என்று ராஜ்யசபையில் நேற்று மத்திய அரசு தெரிவித்தது. அணு உலைகள், அணு மின்சார நிலையங்களால் கதிர்வீச்சு ஏற்பட்டால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுவதோடு மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் அணுமின்நிலையங்களுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர.
தற்போது உலகம் முழுவதும் மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இடி,மின்னல், மழையின்போது செல்போனை காதில் வைத்து பேசினால் தாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் செல்போன்களில் இருந்து கதிர்வீச்சு ஏற்படுகிறது. இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று ராஜ்யசபையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் செய்தி தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் செல்போன் களின் கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ அல்லது எந்தவித உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்பான விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்திருப்பதாக உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் தியோரா தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு விஷயத்தில் அரசு கடுமையாக நடந்து கொள்கிறது என்றார். உலக அளவில் செல்போன் கோபுரங்கள் தரம் விஷயத்தில் உள்ள விதிமுறைகளை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக கடும் விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகின்றது. செல்போன் டவர்கள் கதிர்வீச்சு தொடர்பாக பல்வேறு அம்சங்கங்கள் குறித்து கடந்தவாரம் நடந்த வட்டமேஜை கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சர்வதேச அளவிலும் நடந்த ஆய்விலும் செல்போன் கதிர்வீச்சால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தியோரா மேலும் கூறினார்
No comments:
Post a Comment