Saturday, April 7, 2012


தொடர் மின்வெட்டால் மின் மயானங்களிலும் சிக்கல்

First Published : 07 Apr 2012 02:57:38 AM IST

கோவை: தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டால் தொழில்துறை மட்டும் பாதிக்கப்படவில்லை; மின் மயானங்களில் சடலங்களை எரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவையில் சொக்கம்புதூர், ஆத்துப்பாலம், நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி, துடியலூர், சிங்காநல்லூர் பகுதிகளில் மின் மயானங்கள் உள்ளன.
மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தனியார் பங்களிப்புடன் செயல்படும் இந்த மின் மயானங்களைத் தவிர, தனியார் நிறுவனங்களும் சில இடங்களில் மின் மயானங்களை அமைத்துள்ளன.
ஒவ்வொரு மின் மயானத்திலும் பிரேதங்களை எரியூட்டும் பணி காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 2 மணி நேரத்துக்கு ஒரு சடலம் வீதம் அதிகபட்சமாக 5 சடலங்களை எரியூட்ட முடியும். இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.
சில சமயங்களில் கிணத்துக்கடவு, அன்னூர் உள்ளிட்ட தொலைவான இடங்களில் இருந்தும் சடலங்கள் எரியூட்டுவதற்காகக் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளதால், சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் நிலவுகிறது.
பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் 2 அடுப்புகள் இருப்பதால் ஒரே நேரத்தில் 2 சடலங்களை எரியூட்ட முடியும். அதிகபட்சமாக 10 சடலங்களை ஒரு நாளில் எரியூட்ட முடியும்.
ஆனால், தற்போதைய கடுமையான மின்வெட்டு காரணமாக, தினமும் காலை 9 முதல் 12 மணி வரையும், மதியம் 3 முதல் 6 மணி வரையும் மின்சாரம் இருப்பதில்லை. இதனால் இருக்கும் நேரத்தை அனுசரித்து, அதிகபட்சமாக இரு அடுப்புகளிலும் நாளொன்றுக்கு 3 அல்லது 4 சடலங்களை மட்டுமே எரியூட்ட முடிகிறது. இதே நிலைதான் பிற மின் மயானங்களிலும் உள்ளது.
சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் நின்று போனால், மேலும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஜெனரேட்டர் மூலம் இயக்கினால் அதிகச் செலவாகிறது. இதனால், சடலங்களை எரியூட்ட நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் மயானத்தைப் பலர் நாடுகின்றனர்.
மின்வெட்டு அதிகமாக இருப்பதால் கோவை மாநகராட்சியும் 2012-13 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சொக்கம்புதூர், ஆத்துப்பாலம் மின் மயானங்களை எரிவாயு மயானமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்க, உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் மின் மயானங்களுக்காவது மானிய விலையில் ஜெனரேட்டர்களையும், டீசலையும் அரசு வழங்க வேண்டும்

No comments: