புதுச்சேரி: "விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகளை தருகிறது' என, லயோலா கல்லூரி பேராசிரியர் மில்டன் ரவிச்சந்திரன் கூறினார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வி படிப்புகளைத் தேர்வு செய்வதற்கான, "வழிகாட்டி' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஊடகத்துறையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. பணம், புகழ் என அனைத்தும் ஊடகத்துறை மூலம் கிடைக்கிறது.
இந்தத் துறைக்கு வருவதற்கு முக்கியமாக கம்யூனிகேஷன் திறமை அவசியமாகும். விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு (காட்சித் தகவல் படிப்பு) உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் அதிகளவில் வேலைவாய்ப்புகளை தருகிறது.
காட்சிகள் மூலம் அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும் கலையை விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு கற்றுத் தருகிறது. இந்த படிப்பில், குறியீடு, சமூகவியல், கலை, இலக்கியம், கேமரா, எடிட்டிங், அனிமேஷன் என பல பிரிவுகள் உள்ளன. அனைத்து பிரிவுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.
"டிவி', மொபைல் போன்கள் புழக்கத்தில் இருக்கும் வரை, விஷூவல் கம்யூனிகேஷன் துறை நிலைத்து நிற்கும். இத்துறையில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் உள்ளது. இதில் திறமையானவர்களுக்கு ஆரம்பத்திலேயே 40 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மில்டன் ரவிச்சந்திரன் பேசினார்.
கருத்தரங்கில், 800 ஆண்டுகளுக்கு முன், லியனார்டோ டாவின்சி வரைந்த ஓவியத்தை திரையில் காண்பித்து, அதில் மறைந்துள்ள விபரங்களையும், புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் ஓவியத்தில் மறைந்துள்ள ஓவிய நுணுக்கங்களையும், விஷூவல் கம்யூனிகேஷன் துறையுடன் தொடர்புபடுத்தி பேசினார்.
கருத்தரங்குகளில் கலந்து கொண்ட பெற்றோர் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு, கல்வி வல்லுனர்கள் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சுமந்த் ராமன், பேராசிரியர் மில்டன் ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் அளித்தனர்.
குறிப்பாக, இன்ஜினியரிங் மற்றும் ஐ.டி., துறையிலுள்ள வேலைவாய்ப்புகள், எந்த கல்லூரியில் சேர்ந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு, கல்வி வல்லுனர்கள் தகுந்த விளக்கங்களை அளித்தனர்.
No comments:
Post a Comment