Monday, April 2, 2012


ஓசூர்: ஓசூர் அருகே மகளிர் சுய உதவி குழுவினர் தற்போதைய விலைவாசி உயர்விலும், ஒரு சப்பாத்தி, ஒரு ரூபாய் 65 காசுக்கு தயார் செய்து, தொழிற்சாலைகள், ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து நிரந்தர வருவாய் ஈட்டி வருகின்றனர்.

ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில், 2002-2003ம் ஆண்டு பொன்விழா சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் மாரியம்மன் மகளிர் சுய உதவி குழு, திருவேணி, பூவனேஸ்வரி, கோகுலலட்சுமி, சிவசக்தி, ஓம்சக்தி என, ஆறு மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டன. இந்த மகளிர் சுய உதவி குழுவினர் ஒருங்கிணைந்து சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் சப்பாத்தி உற்பத்தி செய்யும் தொழிலை துவங்கினர். கொத்தகொண்டப்பள்ளியில் டி.வி.எஸ்., தொழிற்சாலை மற்றும் ஏராராளமான சிறு, குறு தொழில்நிறுவனங்கள் உள்ளதால், ஆரம்பத்தில் தொழிற்சாலை கேண்டீன்களுக்கு மட்டும் சப்பாத்தி தயார் செய்து விற்பனை செய்தனர். அதன்பின், ஹோட்டல்கள், மற்ற தொழிற்சாலை கேண்டீன்களுக்கும் மொத்த ஆர்டர் பெயரில் தினம் சப்பாத்தி செய்து வழங்க துவங்கினர்.

தினம் இரண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் வீதம், ஷிப்ட் முறையில் இவர்கள் மாதம், 30 நாளும் சப்பாத்திகளை தயார் செய்து, முழு நேரமும் தொழிற்சாலை கேண்டீன்கள், ஹோட்டல்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். சுய உதவி குழுவினர் உடல் ஆரோக்கியத்துக்காக முழுக்க ஆயில் இல்லாத நல்ல சுவை, மனமுள்ள உயர்தர சப்பாத்திகளை பிரத்தியேகமாக தயார் செய்கின்றனர். சப்பாத்தி தயார் செய்யும் தொழிற்கூடத்தில் சுய உதவி குழுவினர் கை, தலை மற்றும் முகத்தை கழுவிய பின் உறைகள் அணிந்து சுகாதாரமான முறையில் சப்பாத்திகள் தயாராகிறது. அதன்பின், 25 சப்பாத்திகள் வீதம் தனித்தனியாக பேக்கிங் செய்து சிப்காட் தொழிற்சாலைகள், ஹோட்டல்களுக்கு செல்கிறது. இவர்கள் தயார் செய்யும் சப்பாத்தியை மூன்று நாள் வரை வைத்திருந்த சாப்பிடலாம். தற்போதைய விலைவாசி உயர்வால், ஹோட்டல்களில் ஒரு செட் சப்பாத்தி, 25 ரூபாய் முதல், 40 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மகளிர் சுய உதவி குழுவினர் உயர் தரத்தில் உற்பத்தி செய்தாலும், ஒரு சப்பாத்தி, ஒரு ரூபாய் 65 காசுக்கு விற்பனை செய்து நிரந்தர வருவாய் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மகளிர் சுய உதவி குழுவினர் கூறியதாவது: மொத்தமாக கர்நாடகாவில் இருந்து மாதந்தோறும் சப்பாத்தி மாவை விலைக்கு வாங்குவதால் மலிவு விலையில் மாவு கிடைக்கிறது. மேலும், ஒரு சப்பாத்தி, 35 கிராம் எடையில் செய்கிறோம். இதனால், ஒரு சப்பாத்தி செய்ய, 50 காசு மட்டும் செலவாகிறது. அடக்க விலை போக கூடுதலாக, ஒரு ரூபாய், 15 காசு லாபம் வைத்து ஒரு சப்பாத்தி, ஒரு ரூபாய், 65 காசுக்கு விற்பனை செய்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு மாதந்தோறும், 3,500 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. தீபாவளி போனஸ் கிடைக்கிறது. அதனால், ஒரு மகளிர் சுய உதவி குழுவுக்கு, வாரம் இரு நாள் மட்டும்தான் வேலை கிடைக்கிறது. இந்த தொழிலை வியாபார நோக்கில் செய்யாமல். பகுதி நேர சமுதாய சேவையாக கருதி செய்வது மனநிறைவை தருகிறது. இவ்வாறு தெரிவித்தனர்

No comments: