Tuesday, August 21, 2012

நிம்மதிக்கான வழி இது தான்


* நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். ஞானம் என்பது என்ன? பரம்பொருளாகிய கடவுள் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது தான்.
* பரம்பொருள் என்னும் ஒன்று தான் உலகத்தில் உள்ள அத்தனைப் பொருளுமாக இருக்கிறது. எல்லாப் பொருட்களையும் கடவுளாகவே பார்க்க வேண்டும். இதை விடுத்து அந்தப் பொருட்களை அதன் உண்மை இயல்புக்கேற்ப மனதைச் செலுத்தினால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
-காஞ்சிப்பெரியவர்

No comments: