Monday, February 15, 2016

உங்கள் இதயம் காப்பாற்றப்பட..

உங்கள் இதயம் காப்பாற்றப்பட...
By ஆர்.எஸ். நாராயணன்
இந்திய வாழ்வு பாமாயிலுக்கு அடிமையாகிவிட்டது. பாமாயில் என்பது எண்ணெய்ப் பனம்பழத்திலிருந்து பிழியப்படும் ஒரு மலிவான சமையல் எண்ணெய்.
 இந்தியர்கள் உட்கொள்ளும் எண்ணெய்யில் பாமாயிலின் பங்கு 70 சதவீதம். இந்த பாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதியாகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆண்டுதோறும் பட்ஜெட் போடும் போது நிதியமைச்சருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுத்துவதும் இதுவே. காரணம் ஆண்டுதோறும் பாமாயில் இறக்குமதியில் நாம் இழக்கும் அந்நியச் செலாவணி 70,000 கோடி ரூபாய். பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு இது ஒரு முக்கியக் காரணி.
 இந்த இழப்பை மீட்க இந்திய அரசு ரூ.10,000 கோடி ரூபாய் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக ஒதுக்கியுள்ளது. இது புதிதல்ல. தோற்பதற்குத் துணியும் திட்டமே.
 குடியரசுத் தலைவராக ஆர். வெங்கட்ராமனும் பிரதமராக ராஜீவ் காந்தியும் ஆட்சி நடத்திய காங்கிரஸில் வகுத்துச் செயலாற்றிய பல நல்ல திட்டங்களில் வன விரிவாக்கம், சமையல் எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு போன்றவை, மன்மோகன் சிங் ஆட்சி செய்த ஜனநாயகக் கூட்டணியால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டதை நினைவு கூர்வோம்.
 1980-இல் ராஜீவ் காந்தி உருவாக்கிய 'Technology Mission on Oil Seeds' - அதாவது "எண்ணெய் வித்து உற்பத்தி உயர்வுக்கான தொழில்நுட்ப திட்டம்' "மஞ்சள் புரட்சி' என்று பேசப்பட்டது. பசுமைப் புரட்சி, நீலப் புரட்சி, வெண்மைப் புரட்சி முறையே நெல் - கோதுமை, மீன், பால் என்பதுபோல் மஞ்சள், சமையல் எண்ணெய் உற்பத்தியின் அடையாளம். வெள்ளைப் புரட்சிக்கு வித்திட்ட அதே டாக்டர் குரியனின் தலைமையில் மஞ்சள் புரட்சி வழிநடத்தியது.
 தேசிய பால் நிறுவனத்தின் முயற்சியால் சமையல் எண்ணெய்க் கூட்டுறவு இணையம் உருவாகி "தாரா' என்ற பெயரில் சுத்தமான கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சாஃப்ளவர் எண்ணெய் (சாஃப்ளவர் என்பது குஷும்பு என்று கூறப்படும் செந்நிறப் பூக்களைக் கொண்ட எண்ணெய் வித்துப் பயிர். நல்லெண்ணெய்யைப் போல் கொழுப்பு இல்லாத சமையல் எண்ணெய்) அங்காடியில் அமோக வரவேற்பைப் பெற்றன.
 எண்ணெய் பிழியும் தரமான எக்ஸ்பெல்லர், சால்வண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் யூனிட்டுகள் அறிமுகமாகி எண்ணெய் வித்துகள் தேக்கமுற்று வீணாகாதபடி சமையல் எண்ணெய்யை உற்பத்தி செய்வதும் மஞ்சள் புரட்சியின் ஓர் அங்கம்.
 பாமாயில் இறக்குமதிக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி உயர்ந்தது. 1988-89 காலகட்டத்தில் இந்தியாவில் எண்ணெய் வித்து சாகுபடி நிலம் 23 சதவீதம் உயர்ந்தது. பாமாயில் இறக்குமதி கணிசமாகக் குறைந்தது.
 விதி யாரை விட்டது? எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு எமனாக வந்தது அனைத்துலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தம். அன்று பிரதமராயிருந்த நரசிம்ம ராவின் ஆலோசகராகவும், நிதியமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங் பாமாயில் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரியை ரத்து செய்தார். பின்னர் மன்மோகன் பிரதமரானதும் நிதியமைச்சரான சிதம்பரம் ராஜீவ் வகுத்தளித்த எண்ணெய் வித்துக் கொள்கையை எண்ணெய் விட்டுக் கொளுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட தென்னை விவசாயிகளும், நிலக்கடலை விவசாயிகளும் கண்ணீர் மல்கக் கண்முன் நிற்கின்றனர். அந்த அளவுக்கு விலை வீழ்ச்சியுற்றதால் எண்ணெய் வித்து சாகுபடி நிலப்பரப்பு வீழ்ச்சியுற்றது. இந்தியர்களின் தேவையை முழுக்கவும் பாமாயிலே நிறைவேற்றி வருகிறது. இன்றும் அப்படித்தான்.
 இந்தியாவில் ஒரு மஞ்சள் புரட்சியைத் தோற்றுவித்துத் தோற்றுப் போன ராஜீவ் திட்டத்தில் எண்ணெய்ப் பனை சாகுபடித் திட்டமும் இருந்தது. மழைப் பொழிவு அதிகமுள்ள கேரளம், ஆந்திரம், ஒடிசா, தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட இடங்கள் தேர்வாகி எண்ணெய்ப் பனை சாகுபடி அறிமுகமானாலும், உள்ளூர் உற்பத்திக்குப் போதிய அரவணைப்பு (Protection) இல்லாததாலும், உகந்த தட்பவெப்பம் இல்லாததாலும் வெற்றி பெறவில்லை. எனினும் மீண்டும் தோற்பதற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணெய்ப் பனை வேளாண்மையில் லாபம் இல்லாவிட்டாலும், வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அல்வா கிட்டும்.
 பாமாயில் வழங்கும் இந்த எண்ணெய்ப் பனையின் சரித்திரம் என்ன? இதய வலி ஏற்படுவது ஏன்?
 எண்ணெய்ப் பனையின் தாவர இயல் நாமகர்ணம் "எலேயீஸ் கைநீன்சிஸ்'(Elaeis Guineensis). இதன் தோற்ற மையம் மத்திய ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகை வெப்ப மண்டலக் காடுகளில் காங்கோ, நைஜர் நதி சூழ்ந்த மழைப் பிரதேசம். இப்பகுதியில் தாமாகவே மண்டி வளர்ந்திருந்த எண்ணெய்ப் பனையை தாவர இயல் விஞ்ஞானிகள் அடையாளப்படுத்தினர். பார்ப்பதற்கு ஈச்சமரம் போல் இருக்கும். இதன் சமையல் எண்ணெய்ப் பயனை அறிந்தவுடன் ஐரோப்பியர்கள் மலேசியாவில் தோட்டப் பயிராக அறிமுகப்படுத்தினர்.
 ஆப்பிரிக்காவின் நெட்டைப் பனை மலேசியாவில் குட்டைப் பனையாக மாற்றப்பட்டது. அதாவது வீரிய ரகம் உருப்பெற்றது. ஆப்பிரிக்க நெட்டை "துலா', மலேசியக் குள்ள ரகம் "தெலி'. நெட்டை ரகம் குலைக்கு 200 பழம் தரும். மலேசியக் குள்ள ரகம் குலைக்கு 500 முதல் 1000 பழம் விளையும்.
 உலகத்தில் எல்லா எண்ணெய் வித்துப் பயிர்களிலும் விதையை உடைத்துப் பருப்பு எடுத்துத்தான் எண்ணெய் பெற முடியும். ஆனால், எண்ணெய்ப் பனையில் மட்டும் பழமே எண்ணெய் தரும். விதை வெண்ணெய் (Margarine) தரும்.
 மரங்களிலிருந்து குலைவெட்டிப் பழங்களைப் பிரித்தெடுத்துப் பிழிந்தால் எண்ணெய். ஆண்டுக்கு 1 மரத்திலிருந்து 15 முதல் 20 குலைகள் வெட்டலாம். கொள்ளை லாபம் பெறலாம். உதாரணமாக, 1 ஹெக்டேர் நிலக்கடலை சாகுபடி செய்தால் 200 கிலோ எண்ணெய் கிட்டும். அதே 1 ஹெக்டேர் எண்ணெய்ப் பனை சாகுபடி செய்தால் 5000 கிலோ பாமாயில் பெறலாம். உலகிலேயே மிக மலிவான சமையல் எண்ணெய் இதுவே. எனினும் உலகிலேயே அதிகம் உற்பத்தியாகிப் பயனாகும் சமையல் எண்ணெய் சோயா. பாமாயிலுக்கு இரண்டாவது இடம்.
 பூமத்திய ரேகை வெப்ப மண்டலத்தில் ஆண்டுக்கு சுமார் 2000 முதல் 3000 மி.மீ. மழைப் பொழிவுள்ள சூழ்நிலை, பாமாயில் வெற்றியின் பின்னணி. பாமாயில் விஷயத்தில் வினோதங்கள் பல உண்டு. "சூழலுக்கு உகந்த பாமாயில்' என்ற சான்றிதழுடன், பல உணவு அரக்க நிறுவனங்கள் உலகச் சந்தையில் சக்கைப் போடு போடுகின்றன. காடுகளை அழிக்காமல் எண்ணெய்ப் பனை சாகுபடி செய்யப்படுவதாகப் பேசிப் பெற்ற சூழல் முத்திரை ஒரு வகைத் தந்திரம். நிலக்கடலை, தென்னை, எள், சூரியகாந்தி போன்றவை காட்டை அழித்து சாகுபடியாகிறதா என்ன? பாமாயிலுக்கு அடிமையான நாடுகளில் இந்தியாவுடன் சீனாவும் அடக்கம்.
 ÷எண்ணெய்ப் பனை சாகுபடியில் மலேசியப் பொருளாதாரம் எழுச்சி பெற்றுள்ளது. அதே சமயம், அந்நாடு பாமாயிலைக் கொள்முதல் செய்யும் உணவு பகாசூரர்கள் பிடியில் உள்ளது. ஒரு காலத்தில் தென்னை சாகுபடியில் முன்னணி நாடாக விளங்கிய மலேசியாவில் இன்று தென்னையைக் காண்பது அரிது. தென்னையை அழித்துவிட்டு மலேசிய விவசாயிகள் லாபம் கருதி எண்ணெய்ப் பனை சாகுபடி செய்கின்றனர். இருப்பினும் பாமாயில் மனித நல வாழ்வுக்கு உகந்ததா? இல்லை. இல்லவே இல்லை.
 பாமாயிலில் கெட்ட கொழுப்பு உள்ளது. கெட்ட கொழுப்பு - அதாவது Trans fat 20 சதவீதம் உள்ளது. இதனால் பாமாயில் பணியாரம் உண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்தக் குழாய் தடிக்கும். சாதாரணமாக, தேங்காய் எண்ணெய், பசு எருமை நெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது; Trans fat  2 சதவீதமே. ஆனால், இதய நோய் வந்த பிறகு நெய், எண்ணெய் எல்லாமே கேடு.
 சாதாரணமாக சமையல் எண்ணெய்ப் பயன் அதிகமாக டால்டா (வனஸ்பதி) வடிவில் உள்ளது. சில பகாசூர நிறுவனங்கள் அதை பாமாயிலாக வாங்கி ஹைட்ரஜனேட் செய்து, அதாவது குளிரூட்டி நெய்யாக்கி விற்கின்றன. பாமாயில் / பாமாயில் நெய்யில் டிரான்ஸ் கொழுப்பு 25 சதவீதம் உள்ளது. உணவில் 5 கிராம் கெட்ட கொழுப்பு சேர்ந்தால் உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல; நீரிழிவு, புற்றுநோய் எல்லாம் தொடரும். 65 வயதுக்கு மேலான முதியவர்களுக்கு மூளை நரம்பு உயிர்மங்களில் நோய் ஏற்படுத்திப் பேச்சுத் தடுமாற்றம், செவி கேளாமை, உளறல் நோயும் வரும். இதை அல்சீமர் (Alzheimer) என்பார்கள்.
 ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் டிரான்ஸ் கொழுப்புக்குத் தடை உண்டு. ஆகவே, அங்கு விற்கப்படும் டால்டாவில் தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சீமைக் கடுகு எண்ணெய் (Rape Seed Oil) பயன்படுகிறது. டால்டாவில் 2 சதவீதம் ட்ரான்ஸ் ஃபேட் அனுமதிக்கப்படுகிறது. மேற்கூறிய மூன்று வகையான எண்ணெய்களிலும் ட்ரான்ஸ் ஃபேட் 2 சதவீதத்திற்குக் குறைவு.
 அதேசமயம், இந்த பகாசூர உணவு நிறுவனங்களும், இவர்களின் இந்தியக் கூட்டாளி நிறுவனங்களும் இந்தியாவில் விற்பனை செய்யும் டால்டாவில் 10 முதல் 23 சதவீதம் ட்ரான்ஸ் ஃபேட் அனுமதிக்கப்படுகிறது. ஏனெனில், இந்திய டால்டாவில் 75 சதவீதம் பாமாயிலும், மீதி 25 சதவீதம் சோயா எண்ணெய்யுடன் சூரியகாந்தி எண்ணெய்யும் கலப்பது உண்டு. நடுத்தர வர்க்கம் இந்த டால்டாவைப் பயன்படுத்துகிறது. பிஸ்கட், கேக் செய்யும் இந்திய பேக்கரிகளும் அதிகம் டால்டாவைப் பயன்படுத்துகின்றன. ஜிலேபி, மைசூர்பாகு, லட்டு, வண்ணமயமான பல்வேறு மில்க் ஸ்வீட்ஸ், காராபூந்தி, மிக்சர், முறுக்கு அயிட்டங்கள் பலவும் விற்கும் இனிப்பகங்களும், ஆங்காங்கே புற்றீசல் போல் முளைத்துள்ள கையேந்தி பவன்களில் வடை, அதிரசம், பக்கோடா, பஜ்ஜி எல்லாம் பாமாயில் பதார்த்தங்களே.
 பொது விநியோகத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் கொண்டு வீடுகளில் செய்யப்படும் பலவகைப் பணியாரங்களும், பல்வேறு ஜங்க் ஃபுட்களும் ரத்த அழுத்த நோய்க்கும் மூளைச் சேதார வாத நோய்களுக்கும் வழி வகுப்பதை மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் நிரூபித்துள்ளன. கி.பி. 2000-க்குப் பின் நிகழ்ந்த பல மருத்துவப் பரிசோதனைகள் மேல்மட்ட இந்தியர்களைவிட நடுத்தர - ஏழை மக்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் பாமாயிலால் உருவாகிறதை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் கொண்ட உலக உணவு ஆய்வு நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
 உங்கள் இதயம் காப்பாற்றப்பட உணவில் பாமாயிலைத் தவிர்த்து நமது பாரம்பரியத்திற்கு உகந்த பசு நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் - வட இந்தியர்கள் பயன்படுத்தும் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்துவது நன்று.

பாமாயிலில் கெட்ட கொழுப்பு உள்ளது. கெட்ட கொழுப்பு - அதாவது Trans fat 20 சதவீதம் உள்ளது. இதனால் பாமாயில் பணியாரம் உண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்தக் குழாய் தடிக்கும். சாதாரணமாக, தேங்காய் எண்ணெய், பசு எருமை நெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது; Trans fat 2 சதவீதமே. ஆனால், இதய நோய் வந்த பிறகு நெய், எண்ணெய் எல்லாமே கேடு.   நன்றி தினமணி  15/2/16

No comments: