Tuesday, July 2, 2013

தர்மமே தலைக்காக்கும்

புத்தாண்டு பிறக்கப் போவதற்கு அறிகுறியாக இயற்கை அன்னை தனது மர வர்கங்களின் அரசிளங் குழந்தைகளான அரசையும் வேம்பையும் முதலில் அடியோடு இலையுதிரச் செய்கிறாள்.
அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜரையும் பிரதிஷ்டை செய்வது தொன்று தொட்ட வழக்கு. பனிக் காலத்துக்குப்பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள். இது, இம்மாதிரி ஆகாசம் பார்க்க சுக உஷ்ணமான சூர்ய வெளிச்சத்தை ஆனந்தமாக அனுபவிக்கிற பருவ காலமாகவே இருக்கிறது. மழையிலே குடை வேண்டும். கொளுத்துகிற வெயிலில் குடை வேண்டும். கடும்பனிக் காலத்திலும் இராவேளையில் சூரியன் இல்லாதபோது ஆகாசம் பார்க்க உட்கார்ந்து இருக்கமுடியாது. ஆனால் அத்தனை பனியில்லாத இந்த இலையுதிர் காலத்தில் - சிவராத்திரியோடு குளிர் சிவ சிவா எனறு போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் ஸுக உஷ்ணமாக சூரியன் இருக்கும் காலத்தில், பகல் இராப்பொழுது இரண்டிலும் ஆகாசம் பார்க்க உட்கார்ந்து இருக்கலாம். இதை உணர்த்துகிறது போலவே இயற்கையன்னை இந்தப் பருவத்தில் விக்நேசுவரருக்கும் நாகராஜருக்கும் சூரிய பூஜை செய்கிற மாதிரி மேலே இருக்கிற அரசு, வேம்பு மரங்களின் இலைகளை உதிர்த்து விடுகிறாள். நாகராஜனை ஸுப்ரமண்ய ஸ்வாமி என்றே சொல்லலாம். தெலுங்கர்கள் ஸுப்ரமண்யர், பாம்பு இரண்டையும் சுப்பராயடு என்றே சொல்லுகிறார்கள். ஷஷ்டியில் நாகராஜ பூஜை செய்கிற வழக்கம் நம் தமிழ் தேசத்திலும் பிராசீனமாக இருந்து வருகிறது. ஆதி தம்பதிகளின் முதல் குழந்தையாக பிள்ளையார், குமாரஸ்வாமி இரண்டு பேருக்கும் இயற்கையன்னை காட்டுகிற பரிவு, பார்வதீ பரமேசுவரர்களின் குழந்தைகளான நம் அத்தனை பேரிடமும் காட்டுகிற அன்புக்கு அடையாளமாக இருக்கிறது.
அது நிறைந்த பரிவாக இருக்கிறது. இப்போது சுகோஷ்ணமாக மித வெப்பமாக இருந்தால் இவர்களை இப்படிச் சூரிய ஒளியில் உட்கார்த்தி வைத்திருந்தாலும், வஸந்த காலம் வந்தவுடன், சூரியன் கொஞ்சம் உக்ரமானவுடன், அது அவர்களை உபத்திரவப் படுத்தக்கூடாது என்கிற கரிசனம் இயற்கை அன்னைக்கு வந்து விடுகிறது. சூரியன் கடுமையாகும் காலத்தில் துளிர்கள் தழைத்துப் பசுங்குடை பிடிக்கிறாள். இலையுதிர்ப்பது, துளிப்பது எல்லாம் இயற்கை.
லோக நியதி. அவை யுகாந்தரங்களாக மாறாமல் இருப்பவை.
பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும். அதாவது உலகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தர்மம், நியதி, ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தன் குழந்தைகளை வெயில் படாமல் மழை படாமல் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம் தேவையானபோது அதைத் தந்து அரவணைக்க வேண்டும் என்கிற அன்பு ஈசுவரனுக்கு இருப்பதால் அதற்கு, அநுசரணையாக இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.
இந்த அன்பைபப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா. வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு. லேக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிற போதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதைக் கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து ஸ்வாமி விளையாட்டுப் பார்க்கிறார். அந்த மூளையை வைத்துக் கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக் கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இருதியில் ஸெளக்கியத்தைத் தருவது தர்மமே.
ஏதோ ஒன்று உலக மக்கள் அனைவரையும் ஏதோ ஒறு விதத்தில் இந்த தர்மத்தின் திசையில் திருப்பிக் கொண்டுதான் வந்திருக்கிறது. இதனால் சகல தேசங்களிலும் மனிதன் தன்னுடைய பௌதிக தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டும் நிற்காமல் வேறு சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறான். ஒருவன் சிலுவை என்று வைத்துக் கொண்டு பைபிள் படிக்கிறான். இன்னொருவன் நமாஸ் செய்கிறான். வேறொருவன் விபூதியைக் குழைத்துக் கொண்டு பூசிக்கொள்கிறான். இன்னொருவன் நாமக்கட்டியை குழைத்துப் போட்டுக்கொள்கிறான். இவற்றால் நேருக்கு நேர் எந்த பௌதீகப் பலன் தெரியாவிட்டாலும் தலைமுறை தத்துவமாக இவற்றை மனித சமுதாயம் பின்பற்றி வந்திருக்கிறது. ஏன் இப்படி செய்திருக்கிறது.
உலக வாழ்வுக்கு மனிதன் பணமும் பொருளும் சேர்த்தான். அன்றைய தேவையோடு போதாது என்று எதிர் காலத்துக்காகவும் பொருளீட்டினான். எதிர்காலம் என்கிறபோது அது எத்தனை வருஷம் என்ற கேள்வி வந்தது. எப்படியிருந்தாலும் ஒருவன் ஆயிரம் பதினாராயிரம் வருஷம் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தது. ஒரு மநுஷ்யனின் ஆயுள் உள்ளவரைக்கும், அந்த மனுஷ்யனின் சந்ததிக்கும் தேவைப்படுகிற சொத்தைத் தேடினான்.
இந்த மனுஷ்ய ஆயுள் முடிந்தபின் அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வி வந்தது. இந்த உடம்பு போனதோடு மனுஷ்யம் போய்விடுவதில்லை என்று அந்தந்த தேசத்திலும் தோன்றிய மஹான்கள் கண்டார்கள். ஆனால் இந்த
உடம்புக்காகத் தேடிய பணமும் பொருளும் உடம்பு போனபின் அந்த மனுஷ்யனுக்கு சிறிதும் பிரயோஜனமில்லை என்று கண்டார்கள். உடம்பு போனபின் உயிர் நல்ல கதி அடைவதற்காகச் செய்ய வேண்டியது எதுவோ அதை அந்த மஹான்கள் கண்டார்கள். பல தேசங்களில் பலவிதத்தில் வழி கண்டார்கள். சிலுவை, நமாஸ், விபூதி, திருமணி எல்லாம் இப்படி வந்தவையே.
லோகம் முழுவதையும் பகவானுடையதாகப் பார்த்து, அதற்கேற்ப எப்படி நடக்கவேண்டுமோ அதற்கேற்ப நடப்பதே மனுஷ்யர்களின் தர்மம். தனக்கென்று மட்டும் இவன் செய்து கொள்கிற காரியங்கள் இவனை அதர்மத்தில்தான் தள்ளும். எனவே, இவனுக்கு இப்போது இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையை உலகமெல்லாம் என்ற அறிவை உண்டாக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. உன் ஆசைப்படி நடந்து கொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள் என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை. தன்னை முக்கியமாக நினைத்துக் கொள்கிற வரையில் இவன் சுயநலத்துக்குத்தான் காரியம் செய்து கொள்வான் என்பதால் அத்தனை மதங்களும் கடவுள் என்கிற ஒன்றை இவனுக்குச் சொல்லி, அப்பா பிரபஞ்சம் முழுவதையும் செய்த அந்த மஹா சக்தியின் முன் ஸ்ரீ ஒன்றுமே இல்லை என்று காட்டி இவனுடைய அகங்காரத்தைக் குறைக்கின்றன. அந்த மஹாசக்திமானைப் பிடித்துவிட்டால் நம் முளையைச் செய்த அவனே அதை எப்படித் திருத்தவேண்டுமோ அப்படித் திருத்தி நம்மை நம் தர்மத்தில் ஈடுபடுத்தி விடுவான் என்பதால் பக்தியையே பெருமாபாலான மதங்கள் முக்கியமாக வைத்திருக்கின்றன.
ஆனாலும் கடவுள் என்று ஒரு தத்துவம், அதனிடம் பக்தியில் மனசைத் தோய்க்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டால் சாமான்ய ரீதியில் அதைப் பிடித்துக் கொண்டு ஸ்திரமாக நிற்கமுடியவில்லை. பக்தியையும் காரிய ரூபத்தில் காட்டுவது என்றாலே சாதாரண ஜனங்களால் முடிகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு மதத்திலும் சடங்குகள், சந்தியாவந்தனம், ப்ரேயர், நமாஸ் என்றெல்லாம் வைத்திருக்கின்றன. லோக வாழ்க்கையில் இப்படி இருந்துகொண்டே இப்படி பக்தி செய்கிறபோது உலகில் எப்படி நடப்பது இவனுக்கும் தர்மம் என்பதை மதங்கள் சொல்கின்றன. எல்லோரிடமும் அன்பாக இரு. தியாகம் பண்ணு. சேவை பண்ணு. என்று இப்படி எல்லாம் இத்தனை மதங்களும் சொல்லுகின்றன. இப்படி இவன் வாழ்க்கை நடத்தி விட்டால் அப்புறம் உடம்பு போனபின் உயிரானது அந்தக் கடவுளிடமே போய்ச் சேர்ந்து விடும். இதை ஒரு ஸித்தாந்தம், அத்வைதமாகக் கடவுளுக்கு வேறில்லை என்று அதுவாகவே ஆகிவிடுகிறது என்று சொல்லும். இன்னொன்று அவரிடம் போய் ஸேவை செய்து கொண்டே அவரது கிருபையைப் பெற்று ஆனந்தமாக இருப்பது என்று சொல்லும். முடிவான அந்த நிலையைப் பற்றி இப்போது நாம் சண்டைபோட்டு மண்டை உடைத்துக் கொள்ள வேண்டாம். ஏதோ ஒரு வழியில் கடவுளை அடைந்து விடுகிறோம். அதற்கப்புறம் இந்த லோக வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் எதுவும் அடியோடு இல்லை. நீங்காத, நிறைவான ஆனந்தம் மட்டுமே இருக்கும் என்று தெரிந்து கொண்டால் இப்போதைக்குப் போதும்.
அப்படி பரமாத்மா நம்மைத் தம்மிடம் அவைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் லோகத்துக்கும், அவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை வழுவில்லாமல் செய்யவேண்டும். இந்தக் கடமைகள்தாம் நமக்கான தர்மம். அதாவது உடம்பு உள்ளபோதும், உடம்பு போன பிற்பாடும் நம்மைப் பார்ப்பதே தர்மம். உடம்பு போனபின் கைகால் முதலிய அவயங்கள் இல்லை. எனவே, உடம்பு இருக்கும்போதே அது போன பிற்பாடு நற்கதி பெற வேண்டியதற்கான தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். நாம் போனபின் பிறர் நலனுக்காக ஆயுள் இன்ஷ§ரன்ஸ் செய்து கொள்வதைவிட இது முக்கியம். ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர இன்ஷ§ரன்ஸாக இருப்பது தர்மமே. இப்போது ஆயுள் இன்ஷ§ரன்ஸ் ( life insurance) என்று ஒன்றைச் சொல்கிறார்கள். தர்மமே ஆயுள் போனபிறகும் நம்மை பயங்கர after life insurance. ஆயுள் உள்ள போதும் அதே தர்மம் சாந்தியும் சௌக்கியமும் தருகிறது.
எந்த தர்மத்தை நாம் அநுஷ்டிப்பது என்ற குழப்பமே வேண்டாம். பல காலமாகப் பெரியவர்கள் பரம்பரையாக அநுஷ்டித்து வந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அநுபவத்தில் அவர்கள் நித்திய ஸெளக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் நாம் ஒயாத அதிர்ப்தியோடு கிளர்ச்சி, (Demonstration) என்று சொல்கிற மாதிரி இல்லாமல், அவர்கள் நிம்மதியாக நிச்சிந்தையாக இருந்தார்கள் என்று நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, அந்த தர்மத்தை நாம் கடைப்பிடித்தால் போதும். நாமாக ஒன்றைப் புதிதாகப் பண்ணிக் பிடித்துக்கொண்டால் வீண் சிரமம்தான். அது நல்லதாயிருக்குமா கெடுதலாயிருக்குமா என்று நமக்கே ஒயாத சந்தேகமாக இருக்கும். ஆதலினால் முன்பே பெரியவர்கள் அனுஷ்டித்து, நமக்கென்று ஏற்பட்டுள்ள தர்மத்தைக் கைக்கொள்வதே நல்லது.
மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின் அல்லது தர்மநியதியின் - மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையும் தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.
ஸ்ரீ ராமனுக்கு வனவாசத்தில் ஏற்பட்ட கஷ்டம், ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்குத் தாயார் கட்டுச்சாதம் கொடுப்பதுபோல், ராமன் வனவாஸம் செல்லும்போது கௌஸல்யையும் செய்தாள். பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது. குழந்தைக்கு எதைத் தரலாம் என்று நிரம்ப ஆலோசித்தாள் கௌஸல்யை. பிறகு நிரந்தர பக்ஷணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்.
ராகவா. தைரியத்துடனும் நியமத்துடனும் c பாதுகாக்கும் என்று சொல்லித் தர்மத்தை ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.
யம் பாலயஸி தர்ம த்வம் த்ருத்யா ச நியமேன ச
ஸ வை ராகவ சார்தூல தர்மஸ்தவம் அபிரக்ஷது
தர்மமே இறுதியில் ராமனுக்கு ஜயத்தைப் பெற்றுத் தந்தது. தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷ்ணனும் விட்டு விலகினான்.
தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் ஒவ்வொரு மதமாயிருக்கிறது, இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக - நியாயமாக பின்பற்றி சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக.