Saturday, March 30, 2013

எல்லாம் இறைவன் செயல்

* உலகில் உள்ள தொழில்கள் அனைத்தும் இறைவன் செயலால் நடக்கிறது. சோம்பல் ஒன்று தான் உலகில் இழிவானது. எந்தத் தொழிலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மேன்மக்களே. 
* கடவுளுக்கு எல்லாம் ஒன்று போலத்தான். எத்தனை கோடி உயிர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், மடிந்தாலும் அவர் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை.
* நம்முடைய இஷ்டப்படி உலகில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி தான் அது இயங்குகிறது.
* மனம் இயற்கையாகவே தீய சகவாசத்தின் பக்கம் செல்லக்கூடியது. நல்லவர்களின் சேர்க்கை, பயிற்சி ஆகியவற்றால் அது தன்னை உயர்த்திக் கொள்ளும்.
*அழுவதால் பயனில்லை. முன்வினைப்பயனே நமக்கு இப்பிறவியில் வாய்த்திருக்கிறது. அவரவர் செய்த வினைப்பயனை அவரவரே அனுபவித்துக் கழித்தாக வேண்டும். 
* ஒருவன் முதலில் தனக்குத் தானே நண்பனாகத் திகழவேண்டும். அப்போது உலகம் முழுவதும் அவனுக்கு நண்பர்களாகி நட்பு பாராட்டுவர். 
-பாரதியார்

Wednesday, March 27, 2013

மனம் சுத்தமாக இருக்கட்டும்!

* உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனை செய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.
* கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டு நெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.
* வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நாம் சிறு துளியே. எனவே, அனைத்து உயிர்களுடனும் ஒன்றுபட்டு ஒரே அம்சமாகத் திகழ வேண்டும்.
* பகவத்கீதையை கிளிப்பிள்ளையைப் போல பாராயணம் செய்வதால் பலனேதும் இல்லை. அதுகாட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும். 
* யாரை வழிபடுகிறோமோ, அந்த தெய்வம் காட்டியே வழியில் நடப்பதே உண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் , நம்முடைய நேரத்தை வீணடிப்பதாகும்.
* மனதைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இறைவன் நம் பிரார்த்தனையை அவசியம் கேட்பான்.
* மனதை அலைய விடாமல் கட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான வழிபாடாகும்.
காந்திஜி 

Tuesday, March 26, 2013

தூங்கும் முன் சிந்தனைசெய்

* சேதுவில் அணை கட்டிய ராமனுக்கு அணில் செய்த உதவிபோல், நாமும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும்.
* ஆசிரியர் கடமைக்கு கல்வி கற்று தராமல், மாணவனை சோதித்து சுத்தம் செய்து, நற்குணம் உள்ளவனாக, புத்தியுள்ளவனாக மாற்ற வேண்டும்.
* அரசை எதிர்பார்த்து குறை கூறி கொண்டு இருக்காமல், நாட்டின் மீது பற்றுள்ள மக்கள் சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த நன்மைகளில் ஈடுபட வேண்டும்.
* ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கும் கடவுளை பிடித்துக் கொள்ள வேண்டும். உலகத்துக்குச் சேவை செய்தால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி ஏற்படும்.
* வாழ்க்கையில் நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, நம்மால் உலகம் மேம்படும் என்று தெரிந்தால் அதற்காக நாம் பாடுபட வேண்டும்.
* தினமும் தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்த்துவிட்டு, இறைவனின் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு தூங்க வேண்டும்.
-காஞ்சி பெரியவர்