Friday, August 10, 2012

நீ நீயாய் இரு


மற்றவர்களை (உங்களையும் சேர்த்து) பாதிக்காதவரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உங்களின் சிறப்புத்தன்மையோடு அணுகுங்கள். உங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவியுங்கள். இது எனக்கு வந்த ஒரு இமெயிலின் சாராம்சம். அதற்குள் ஒரு குட்டி கதையும் உண்டு. அதனை என் வழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
** தமிழகத்தின் தெற்கு மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஒரு வயதான பெரியவர், சென்னையில் குடியிருக்கும் தனது மகனை பார்க்க வருகிறார். அவரது மகன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். பெரியவருக்கு (தந்தை) கிராமத்து தமிழைத்தவிர வேறு மொழிகள் தெரியாது. அதற்காக அவர் ஒருபோதும் கவலை கொண்டதில்லை. சென்னைக்கு வந்தால் தன் மகன் மற்றும் குடும்பத்தாருடன் சிறிது நாட்கள் தங்கி விடுவார். எங்கேயும் வெளியில் செல்லவோ அல்லது ஊர் சுற்றி பார்க்கவோ ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இந்த முறை அவரை 'சந்தோஷ' படுத்த எண்ணி ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு அழைத்து சென்றார் அவரின் மகன். பெரியவர் தனது கிராமத்து ஸ்டைலில் வேட்டி, துண்டு அணிந்து புறப்பட்டு சென்றார்.
 
உணவு விடுதியில் உணவருந்திய பிறகு, அங்கே மேசையில் வைக்கப்பெற்ற வறுத்த நிலக்கடலையில் சிறிதினை எடுத்து துண்டில் முடிந்து கொண்டார். அவருக்கு வறுத்த வேர்க்கடலை என்றால் ரொம்ப பிடிக்கும். உணவகதிலிருந்து கிளம்பி தனது காருக்கு வரும் வழியில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் கால் இடறி தவறிவிழுந்த பெரியவர் வேர்க்கடலையை அந்த வராண்டாவில் சிதற விட்டார். அங்கிருந்த சிப்பந்திகள் அனைவரும் அவரை பார்த்து கேலியாக சிரித்தனர். " இந்த கிழவனை இனிமேல் இது போன்ற பெரிய இடத்திற்கு அழைத்து வரக்கூடாது" என்று மகன் நினைத்திருப்பான் என்பதுதான் நமது யூகமாக இருக்கும். ஆனால் நடந்தது வேறு.
 
பதறிப்போன மகன், தனது தந்தையை சட்டென்று தூக்கிவிட்டார். பின்பு கீழே சிதறிப்போன வேர்க்கடலையை பொறுக்கியெடுத்து மீண்டும் அந்த துண்டிலேயே கட்டி தனது தந்தையிடம் கொடுத்தார். தந்தைக்கு அந்த உணவு விடுதியை மிகவும் பிடித்திருந்தது, வேர்க்கடலைக்காக. பின்பு காருக்கு சென்ற இருவரும் அடுத்தவாரம் மீண்டும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முடிவெடுத்தனர். சில நாட்கள் சென்ற பின்பு, ஒருநாள் வீட்டிற்கு வந்த நண்பரின் குடும்பத்துடன் அரட்டையின் பொது இருவரும் (தந்தையும், மகனும்)  இதை பற்றி சிரித்தபடியே விவரித்தனர்.  சிரித்து முடித்தபின் நண்பர் கேட்டார், "ஏம்பா! உனக்கு அப்போது அவமானமாக இல்லயா? . அதற்கு இவர் "நண்பரே, இவர் எனது தந்தை. அவரின் விருப்பப்படி இருக்கிறார். அவருக்கு தெரிந்த கிராமத்து பாஷை பேசுகிறார். அவருக்கு விருப்பமான உடை அணிகிறார். அவருக்கு பிடித்தமான வேர்க்கடலையை பணம் கொடுத்து வாங்கிதான் சாப்பிட்டார். இது அவரது பழக்க வழக்கம், இயற்கையான சுபாவம். இதில் நான் அவமானப்பட என்ன இருக்கிறது. எனது தந்தை அவரது விருப்பப்படி இருப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை." நண்பர் மீண்டும் "சரி, அங்கு வேலை செய்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்?" என்க, " அவர்களுக்கு தேவை பணம். அதாவது சாப்பிடும் சாப்பாட்டிற்கு பணம், பரிமாறுபவர்களுக்கு 'டிப்ஸ்' என்கிற பணம். அவ்வளவுதான். எனக்கு எனது தந்தையும் அவரது சந்தோஷமும் தான் முக்கியம். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதல்ல" என்று நெத்தியடியாக பதிலளித்தார் இவர் (மகன்).
 
அதனை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். தனது மாமனாரை நினைத்து பெருமை பட்டுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று அவரின் மனைவி  ஆரம்பிக்க அரட்டை சூடு பிடித்து அந்த இடமே கலகலப்பானது **.
 
இது வெறும் தந்தை மகன் உறவின் பெருமையை சொல்லும் கதை அல்ல. இதனை வெறும் கதையாக பார்க்காமல் அதில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாருங்கள். இத்தனை வயதாகியும் தன்னுடைய பேச்சு, உணவுமுறை, உடை பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாத தந்தை பாத்திரம். "தனது தந்தை அவரின் விருப்படி இருக்கிறார். அவரை கட்டாயப்படுத்தி மாற சொல்வதால் எனக்கோ அல்லது அவருக்கோ எந்த பலனும் இல்லை மற்றும் அவர் அப்படி இருப்பதால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை, அது மட்டுமில்லாமல் அவர் எனது தந்தை. நான் அவரின் உணர்வுகளை மதிக்கிறேன் " என்று கூறும் மகன் பாத்திரம். என்ன தோழர்களே! நாம் இப்படி நினைப்போமா? நிச்சயமாக இல்லை.
 
'என் மனைவிக்கு இங்கிலீஷ் பேச வராது, அவளுக்கு உலக அறிவு கம்மி, அதனால் அவளை எங்கும் உடன் அழைத்துசெல்வதில்லை ', 'என் கணவர் வெறும் குமாஸ்தா. பெரிய (பணக்கார) மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறை அவருக்கு தெரியாது, எனவே அவருடன் நான் வெளியில் செல்வதில்லை', ' என் பெற்றோருக்கு பொது இடங்களில் நாகரீகமாக நடக்க தெரியாது, அதனால் அவர்களை என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில்லை',  என்கிற மனப்போக்கு (மன நோய்) உங்களுக்கும் உண்டா. தயவுசெய்து அதனை சீக்கிரம் அழியுங்கள். இல்லையென்றால் அது உங்கள் சமூகத்தையே அழித்துவிடும்.
 
தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று உங்கள் மனைவியோ, கணவனோ, பெற்றோரோ, தாத்தா பாட்டியோ கவலை பட்டதுண்டா? தான் வெறும் குமாஸ்தா தான் என்று உங்கள் கணவர் தன்னை குறைத்து மதிப்பிட்டதுண்டா? நீங்கள் மட்டும் ஏன் மற்றவர்களின் 'விமர்சனத்திற்காக' கவலைப்படுகிறீர்கள். யாரோ ஒருவருக்காக உங்க உறவுகளின் உணர்வுகளை நசுக்காதீர்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதான் உங்களுடய வேட்டியணிந்த ஒரு கிராமத்து உறவுக்காரன் ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு போகமுடியும்.
 
மற்றவர்களை (உங்களையும் சேர்த்து) பாதிக்காதவரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உங்களின் சிறப்புத்தன்மையோடு அணுகுங்கள். உங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவியுங்கள்

No comments: