Thursday, August 9, 2012

ரம்ஜான் சிந்தனைகள் 20: பலன் கருதாது தானம் செய்க!

பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டியது அவசியக்கடமைகளில் ஒன்று. "உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! என்கிறது குர்ஆன். இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார். ஏதோ ஒரு சூழலில் அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது. வாசலில் யாசகம் எடுப்பவர்கள் வந்து நின்று, ஏதாவது கேட்டு, நம்மால் கொடுக்க முடியாத நிலை இருந்தால், அவர்களை விரட்டக்கூடாது. "இப்போது என்னிடம் எதுவுமில்லை, பிறகு பார்க்கலாம் என பண்போடு எடுத்துச்சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான். ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு தகுதியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். ஆனால், தானம் செய்யும்போது, ""பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன். என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள்? என்றோ, "" நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதே. எனக்கு சாதகமாகத் தான் நீ இருக்கணும், என்று நிர்ப்பந்திப்பதோ கூடாது. அதாவது, தானத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், அதைச் செய்ததின் பலனை அடைய முடியாது. பலன் கருதாமல் தானம் செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.

No comments: